Friday, July 20, 2012

புத்தரால் சித்திரா பூரணை வென்றது! பித்தரால் ஆடி அமாவாசை தோற்றது!

நேற்று ஆடி அமாவாசை விரத நாள். ஆடி அமாவாசை விரதத்தின் தத்துவம் பற்றி ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் காலைப் பிரார்த்தனையில் எடுத்தியம்பினார்.


அன்புக்குரிய மாணவர்களே!
இன்று (நேற்று)  ஆடி அமாவாசை விரத நாள். தந்தையை இழந்தவர்கள் அவர் பொருட்டு விரதம் அனுஷ்டிக்கின்ற புனித நாள்.


இந்நாளில் உபவாசம் இருந்து புனித நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து, தான தர்மம் கொடுத்து இறந்துபோன தன் தந்தையையும் தந்தை வழி முன்னோர்களையும் நினைவிருத்தி நன்றி தெரிவிக்கும் நாள்தான் ஆடி அமாவாசை விரதம்.

ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற அமாவாசையிலும் விரதம் இருப்பது உத்தமம். எனினும் அதனைக் கிரமமாக செய்ய முடியாதவர்கள் வருடத்தில் ஒருமுறை வருகின்ற ஆடி அமாவாசை விரதத்தையேனும் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறிய ஆசிரியர், இதே போன்று தாயை இழந்தவர்கள் சித்திரா பூரணையில் விரதம் அனுஷ்டிப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்.

இவ்வாறு ஆசிரியர் விளக்கம் கொடுக்கும் போது ஒரு மாணவன் எழுந்து சேர்! ஒரு சந்தேகம் என்றான். என்ன சந்தேகம்? என்றார் ஆசிரியர்.

சேர்! இறந்துபோன தன் தந்தையை நினைவுபடுத்தி வருடத்தில் ஒருமுறை அனுஷ்டிக்கும் விரத நாளில் பாடசாலைகள் இயங்குகின்றன. பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தன் தந்தையை இழந்த மாணவன் ஒருவன் எப்படி இந்த விரதத்தை அனுஷ்டிப்பது. இப்படிக் கேள்வி எழுப்பினான்.

மாணவனின் கேள்வியால் அதிர்ந்துபோன ஆசிரியர் அதில் இருக்கக்கூடிய நியாயங்களையும் புரியாமல் இல்லை. மாணவனின் கேள்விக்குப் பதிலளிக்க முற்பட்ட அவர் இதுபற்றி எல்லாம் தமிழ் அரசியல் வாதிகள் அரசுடன் கதைத்து ஆடி அமாவாசை விரதத்திற்கு விடுமுறை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது மட்டுமல்ல தமிழ் அதிகாரிகளும் பரீட்சைகளை நிறுத்தி ஆடி அமாவாசை விரதத்திற்காக விசேட விடுமுறை வழங்கி பதில் பாடசாலை நடத்த அனுமதிக்க வேண்டும்.

இத்தகைய முடிவுகளை செய்வதன் மூலம் பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தும் கடமையைச் செய்ய ஊக்குவிக்க முடியும். இதன்மூலமே நன்றி உணர்வுள்ள, பாசமுள்ள, கடமை உணர்வுமிக்க மாணவர்கள், பிள்ளைகளை உருவாக்க முடியும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இன்னொரு மாணவன் சேர்! பெற்ற தாயை நினைந்து பூரணையில் விரதம் அனுஷ்டிக்கும்போது அதற்கு விடுமுறை வழங்குகிறார்கள் அல்லவா?அதுபோல ஆடி அமாவாசை விரத நாளிலும் விடுமுறை வழங்கலாமே என்றான்.

ஆம்! இந்த மாணவன் கூறுவது நியாயம் தான். ஆனால் பூரணைக்கான விடுமுறை என்பது சைவமக்கள், தாய்க்கு விரதம் அனுஷ்டிக்கிறார்கள் என்பதற்காக வழங்கவில்லை.

அது புத்தபிரான் ஞானம்பெற்ற நாள் என்பதாலேயே அந்த நாள் விடுமுறை நாளாயிற்று. இவ்வாறு ஆசிரியர் கூறி முடிக்க, திடீரென எழுந்த மாணவன் ஒருவன்

ஓ! புத்தரால் பூரணை வென்றது. எங்கள் பித்தன் சிவனால் அமாவாசை தோற்றது. அப்படித்தானே என்று கூற, மாணவர்களின் சத்தம் அந்த மண்டபத்தை அதிர வைத்தது.

No comments:

Post a Comment