Showing posts with label விரதங்கள். Show all posts
Showing posts with label விரதங்கள். Show all posts

Wednesday, February 26, 2014

பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் மகாசிவராத்திரி

பெண்கள் அம்மனை ஒன்பது நாட்கள் வழிபடுவது நவராத்திரி. இதேபோல் ஆண்கள் சிவனை பூஜிக்கும் நாள் சிவராத்திரி. இந்த சிவராத்திரி பற்றி பல புராண கதைகள் உள்ளன.


சிலவற்றைப் பார்ப்போம். பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவர் படைத்த ஜீவராசிகளும் அழிந்தநிலையில், இரவில் அம்பிகை உமாதேவி, சிவனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜை முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே அதாவது `சிவராத்திரி‘ என்றே  கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் கொடுத்து முடிவில் மோட்சமும் பெற அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டினாள். சிவபெருமானும், அதற்கு இசைந்தார் அதுவே சிவராத்திரி. ஒரு சமயம் சிவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அம்பிகை உமாதேவி. அதனால் சகல உலகங்களும் இருளில் மூழ்கின.

அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள், மேலும் சிவ னை இரவேல்லாம் உமாதேவி தேவிகாபுரத்தில் பூஜித்த நாள் சிவராத்திரி. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் தனது அடி, முடி காண அவ்விருவருக்கும் கட்டளை இட்டார். அடி முடி காணமுடியாமல் அவர்கள் தோல்வியுற்றனர். அவர்கள் அகந்தை அழிந்தது. அப்போது சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி அவர்களுக்கு காட்சியளித்து  திருவண்ணா மலையாக மாறியநாள் சிவராத்திரி. மார்க்கண்டேயனை எமனிடமிருந்து சிவன் காத்த நாள் சிவராத்திரி. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.  இவ்வாறு புராணங்களில் சிவராத்திரி குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.

சிவனை வழிபடும் முறை :

சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவனுக்கு பஞ்ச வில்வங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். இயலாதவர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங்களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும். அன்று தானதர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது.

திங்கட்கிழமை ஸ்பெஷல் :

சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷம். இதை ‘லோக சிவராத்திரி‘ என்பர். அன்று விரதமிருந்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு  முழுவதும் அபிஷேக ஆராதனைகளை செய்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.

சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் 

திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு  ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகப்பட்டினம்,  கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.

சிவராத்திரி விழா 

அடையார், முதல் அவென்யூ, சாஸ்திரி நகரில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தில் வரும் 27ம் தேதி, சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிகள் விபரம் :
  • வரும் 26ம் தேதியன்று மாலை 108 சங்கு அபிஷேக நிகழ்ச்சி.
  • 27ம் தேதி காலை நவகலச அபிஷேகம் மாலை 5மணிக்கு பிரதோஷம் இரவு 8மணிக்கு முதல் கால அபிஷேகம். இரவு 11 மணிக்கு இரண்டாம் கால  அபிஷேகம்.
  • 28ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம் காலை 4மணிக்கு நான்காம் கால அபிஷேகம்.

Sunday, January 12, 2014

ஏகாதசி விரதத்தின் மகத்துவம்

இப்போது ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி காண்போம்? இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.

முக்கோடிதேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது . திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம். ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது. பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தைமட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

பாற்கடலில் மந்தாரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

Sunday, January 5, 2014

வைகுண்ட ஏகாதசி தினத்தில் இறந்தால் முக்தி கிடைக்குமா?

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது.
ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

Saturday, November 30, 2013

திருவெம்பாவை - மார்கழி நோன்பு - மார்கழி தோச்சல் விரத மகிமையும் அதன் சிறப்பும் !

திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். இவ்விரதம் இவ் வருடம் 09.12.2013 அன்று ஆரம்பமாகின்றது என சோதிடம் கணித்துள்ளது. ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.




மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம்; திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.

மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்களாலும், "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது.

சைவகன்னியர்கள்; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி  உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக" அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள  மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.

மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும்  மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.

மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ''அம்பா ஆடல்'' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை.  இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழைத் தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது

பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம்  கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது  அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .

வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.

மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய "திருவெம்பாவை"யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய "திருப்பாவை" யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பெறுகின்றன.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் இந் நோன்பு வருடாவருடம் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. அதிகாலை 4 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி நடைபேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புராணக் கதைகள்:
கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் தேரில் ஆரோகணித்து வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இன்றும் செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

சேந்தனார்  ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே "ஆர்த்திரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

இவ் விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் ”பாரணை” செய்வர்.

Wednesday, November 20, 2013

கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் ஐப்பன் கோடி அர்ச்சனை

ஸ்ரீமத் பாகவதத்தில் பிருது மன்னனைப் பற்றிய ஒரு தகவல் உண்டு. சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகவே உதித்தவர் அவர். அவர் அவதரித்தபோது பூமியில் பஞ்சமும் பட்டினியும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. மக்கள் அடிப்படை தேவைகளுக்கே வழியில்லாமல் கிடந்தனர். பசுவிற்குள் இருக்கும் பாலாக, பூமிக்குள் ஒடுங்கியிருக்கும் அனைத்தையும் பகவானின் அம்சமான பிருது மன்னன் கறந்து அளித்தான்.
எப்போதெல்லாம் வழிபாடு தர்மங்களுக்குரிய ஹோம, யாகங்கள் குறைந்து இறைவனை அர்ச்சித்தல் என்கிற செயலில் தொய்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பகவானே அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதை பிருது மன்னனின் கதை விளக்குகிறது.


அவர், அர்ச்சனை ரூபமான தர்மத்தை கையாண்டு பூமியிடமிருந்து சகல செல்வங் களையும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். எனவே அவருக்கு ‘பூமியைக் கறந்த பிருது மன்னன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இப்படியாக அர்ச்சனை, ஹோமங்கள் மூலமாக அவர் அள்ளிக் கொடுத்ததால், மகாலட்சுமி அம்சமான அவருடைய மனைவிக்கு அர்ச்சிஸ் என்கிற பெயர் வந்தது. இந்த திவ்ய தம்பதியினர் ஆதியில் உலகிற்கு காட்டிய தர்மமே அர்ச்சனை எனும் உயர்ந்த விஷயமாகும். அந்த மிக உயர்ந்த தர்மமானது இப்போது கோடி அர்ச்சனையாக கலியுகக் கடவுளான ஸ்ரீ ஐயப்பனுக்கு சென்னை - நங்கநல்லூர் தலத்தில் செய்யப்படவிருக்கிறது என்பது நம்முடைய பெரும் பாக்கியமாகும்.


1990ம் ஆண்டு விளக்கு பூஜைக்காக ஐயப்பனுடைய விக்ரகத்தை பம்பையில் ஆராட்டு நடத்தி ஐயனின் 18 படியேறி, அதற்கு சந்நதியிலுள்ள விபூதி சாத்தப்பட்டது. பிறகு 1995ம் வருடம் ஐயப்பனுக்கு கோயில் கட்ட அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்ததில் இக்கோயில் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்புறம் அமையுமென்று கணிக்கப்பட்டது. அதன்படி ஐயப்பனின் திவ்ய விக்ரகம் ஐயனின் சங்கல்பத்தாலும், பேரருளாலும் நன்முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே இன்று ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் என்றழைப்படுகிறது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், சபரிமலையிலுள்ள சந்நிதானத்தின் நடையை அடைத்தபின் இத்தலத்தில் இருந்தும் ஸ்ரீ ஐயப்பன் அருள்பாலிக்கிறார் என்று பிரசன்னத்தின்போது அறியப்பட்டது.


இப்பேற்பட்ட அரியதும் அபூர்வமான இந்தக் கோயிலில் உலக நலனை முன்னிட்டும் குருசாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும் ஆங்காங்கு இருக்கும் ஐயப்பனின் பக்த குழுக்கள் அனைத்தும் இணைந்து ஒரு கோடி அர்ச்சனை வைபவத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த அற்புத கோடி அர்ச்சனை வைபவம் 7.12.2013 முதல் 22.12.2013 வரை நங்கநல்லூர் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் எனும் இக்கோயிலில் நடத்தப்பட உள்ளது. அதிலும் ஸ்ரீஐயப்பனுக்கு மிகவும் உகந்த மண்டல பூஜை காலமாகிய கார்த்திகை - மார்கழி மாதங்களில் நடைபெறுவதென்பது ஐயப்ப பக்தர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.

Wednesday, November 6, 2013

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை!


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.





இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.

இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.

இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா? ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும். சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும்.

அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.
ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.

அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

கந்தசஷ்டி தோன்றிய கதை..!!!

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில்


சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.


மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.


அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.


அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.


தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான்.


 அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.


முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை


மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

மூலம்: தினமலர்

Wednesday, October 30, 2013

கேதார கௌரி விரதம் - கணவன், மனைவி ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக இணைபிரியாது வாழ வரம் தரும் விரதம் !

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்
ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.




இவ் விரதம் இவ்வருடம் 14.10.2013 திங்கட்கிழமை முதல் 03.10.2013 ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையிலும்,

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 02.11.2013 சனிக்கிழமை  வரை வட அமெரிக்காவிலும், அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம்.

கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிபதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.




இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானது சக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும்,  புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும், இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம்' பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.

கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில்
உமதேவி  சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க கிருதாசி, மேனகை முதலிய தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய அரம்பையானவள் அற்புதமான நடன விசேடங்களை நடித்துக்காட்டுகிறாள்.

அப்போது அந்தரங்க பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள். பார்வதக்குகை அச் சிரிப்பொலியால் கலகலவென எதிரொலிக்கின்றது. பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கௌரவித்து பாராட்டுகிறார்கள்.
இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்வேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர்.

ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் "பிருங்கி முனிகள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.

பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் அர்த்தபுஷ்டியான ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார். தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாத மேலும் கோபமுற்றவளாக எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.

ஆதலால் "நிற்க முடியாமல் போகக் கடவாய்' என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். இந்நிலையில் என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆச்சிரமத்தை அடைந்தார்.

இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை எனக் கூறி கைலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஓர் விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியின் திருப்பாதங்கள்
அவ்வனத்தில் பட்டதும், மரஞ் செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று தளிர்த்தன. மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹாரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆச்சிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.

முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! முக்கண்ணரின் தேவியே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவியே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.

அதற்கு பார்வதி தேவி "பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து மிகவும் நீண்ட தூரம் வந்து விட்டேன்” என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.

வால்மீகி முனிவர்
பரமேஸ்வரியை தனது ஆச்சிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே (தற்போது தென் இந்தியாவில் உள்ள மாங்காட்டு அம்மன் ஆலயம்) வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.

தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் "கேதார கௌரி விரதம்" எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.

புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் என்பவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும் என்று கூறினார். சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் தேவி? எனக் கேட்டார். அப்போது "இமைப் பொழுதும் உமைப் பிரியாத வரம் வேண்டும் சுவாமி" என்றார். தந்தோம் தேவி என தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கைலாயம் சென்றார். இறைவி இவ் விரதத்தை அனுஷ்டித்தமையால் ஓர் உயிரும் ஓர் உடலுமாக இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகின்றன.
இவ்விரத முடிவில் 21 இழையினால் ஆன காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கையிற்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்டுதல் வேண்டும். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.




இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று, அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'


கேதாரகௌரி விரதம அனுட்டிக்கும் முறை:
கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகைசமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசனை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.

விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றைமடடுமே அருந்தி தெய்வசிநதனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக்கயிற்றில் இருக்கும் 21 முடிச்சுக்களுக்குமுரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம்செய்து கும்பத்துக்கு மலர்சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.

இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை கேதாரிகௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றையதினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குருவழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல் ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை.
இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனைவருடகாலம் மட்டுமே அனுஷ்டிக்கவேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிபத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜைவழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல.

ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:




புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு.
தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
 
கௌரிக் காப்புத் தோத்திரம்
 
தேவி துணை
ஓம் சக்தி ஓம்
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்
திருச்சிற்றம்பலம்

இவ்விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
தேவாரம்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
- திருஞானசம்பந்தர்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

துர்க்கை அம்பாள் போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி     4.

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி           8.

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி              12.

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி            16.

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி       20.

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி            24.

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி             28.

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி             32.

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி             36.

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி         40.

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி              44.

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி           48.

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி  52.

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி         56.

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி                60.

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி           64.

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி           68.

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி         72.

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி              76.

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி          80.

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி                   84.

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி        88.
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி   92.

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி                 96.

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி       100.

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி        104.

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி             108. 

மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும்
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி         20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி     70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி   90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி  100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.
மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்
ஓம் ஓம்சக்தியே             போற்றி ஓம்
ஓம் ஓங்கார ஆனந்தியே        போற்றி ஓம்
ஓம் உலக நாயகியே            போற்றி ஓம்
ஓம் உறவுக்கும் உறவானவளே    போற்றி ஓம்
ஓம் உள்ளமலர் உவந்தவளே        போற்றி ஓம்
ஓம் ஓதரிய பெரும் பொருளே        போற்றி ஓம்
ஓம் உண்மைப் பரம் பொருளே    போற்றி ஓம்
ஓம் உயிராய் நின்றவளே        போற்றி ஓம்
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் மனமாசைத் துடைப்பாய்        போற்றி ஓம்        10.

ஓம் கவலை தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் ககனவெளி ஆனாய்        போற்றி ஓம்
ஓம் புற்றாகி வந்தவளேஓம்        போற்றி ஓம்
ஓம் பாலாகி வடிந்தவளே        போற்றி ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய்        போற்றி ஓம்
ஓம் பண்ணாக இசைந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாமலர் உவந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாம்புரு ஆனாய்            போற்றி ஓம்
ஓம் சித்துரு அமைந்தாய்        போற்றி ஓம்
ஓம் செம்பொருள் நீயே        போற்றி ஓம்        20.

ஓம் சக்தியே தாயே            போற்றி ஓம்
ஓம் சன்மார்க்க நெறியே        போற்றி ஓம்
ஓம் சமதர்ம  விருந்தே        போற்றி ஓம்
ஓம் ஓங்கார உருவே            போற்றி ஓம்
ஓம் ஒருதவத்துக் குடையாய்        போற்றி ஓம்
ஓம் நீள்பசி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் நின்மதி தருவாய்            போற்றி ஓம்
ஓம் அகிலமே ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் அண்டமே விரிந்தாய்        போற்றி ஓம்
ஓம் ஆன்மீகச் செல்வமே        போற்றி ஓம்        30.

ஓம் அனலாக ஆனாய்            போற்றி ஓம்
ஓம் நீராக நிறைந்தாய்            போற்றி ஓம்
ஓம் நிலனாகத் திணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தூறாக வளர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் துணிபொருள் நீயே        போற்றி ஓம்
ஓம் காராக வருவாய்            போற்றி ஓம்
ஓம் கனியான மனமே            போற்றி ஓம்
ஓம் மூலமே முதலே            போற்றி ஓம்
ஓம் முனைச்சுழி விழியே        போற்றி ஓம்
ஓம் வீணையே இசையே        போற்றி ஓம்        40.

ஓம் விரைமலர் அணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவங் கடந்தாய்        போற்றி ஓம்
ஓம் சகலமறைப் பொருளே        போற்றி ஓம்
ஓம் உத்தமி ஆனாய்            போற்றி ஓம்
ஓம் உயிர்மொழிக் குருவே        போற்றி ஓம்
ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் நீள் நிலத் தெய்வமே        போற்றி ஓம்
ஓம் துரிய நிலையே            போற்றி ஓம்
ஓம் துரிய தீத வைப்பே        போற்றி ஓம்
ஓம் ஆயிர இதழ் உறைவாய்        போற்றி ஓம்    50.

ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய்    போற்றி ஓம்
ஓம் கருவான மூலம்            போற்றி ஓம்
ஓம் உருவான கோலம்        போற்றி ஓம்
ஓம் சாந்தமே உருவாய்        போற்றி ஓம்
ஓம் சரித்திரம் மறைத்தாய்        போற்றி ஓம்
ஓம் சின்முத்திரை தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் சினத்தை வேரறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கையிரண்டு உடையாய்        போற்றி ஓம்
ஓம் கரைபுரண்ட கருணை        போற்றி ஓம்
ஓம் மொட்டுடைக் கரத்தாய்        போற்றி ஓம்        60.

ஓம் மோனநல் தவத்தாய்        போற்றி ஓம்
ஓம் யோகநல் உருவே            போற்றி ஓம்
ஓம் ஒளியன ஆனாய்            போற்றி ஓம்
ஓம் எந்திரத் திருவே            போற்றி ஓம்
ஓம் மந்திரத் தாயே            போற்றி ஓம்
ஓம் பிணி தவிர்த்திடுவாய்        போற்றி ஓம்
ஓம் பிறவிநோய் அறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் மாயவன் தங்கையே        போற்றி ஓம்
ஓம் சேயவன் தாயே            போற்றி ஓம்
ஓம் திரிபுரத்தாளே            போற்றி ஓம்        70.

ஓம் ஒருதவம் தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் வேம்பினை ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் வினையெலாம் தீர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் அஞ்சனம் அருள்வாய்        போற்றி ஓம்
ஓம் ஆருயிர் மருந்தே            போற்றி ஓம்
ஓம் கண்ணொளி காப்பாய்        போற்றி ஓம்
ஓம் கருத்தொளி தருவாய்        போற்றி ஓம்
ஓம் அருளொளி செய்வாய்        போற்றி ஓம்
ஓம் அன்பொளி கொடுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கனவிலே வருவாய்        போற்றி ஓம்        80.

ஓம் கருத்திலே நுழைவாய்        போற்றி ஓம்
ஓம் மக்கலைக் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய்    போற்றி ஓம்   
ஓம் எத்திசையும் ஆனாய்        போற்றி ஓம்
ஓம் இதயமாம் வீணை            போற்றி ஓம்
ஓம் உருக்கமே ஒளியே        போற்றி ஓம்
ஓம் உள்ளுறை விருந்தே        போற்றி ஓம்
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனங்கனிந்து அருள்வாய்    போற்றி ஓம்
ஓம் நாதமே நலமே            போற்றி ஓம்        90.

ஓம் நளின மலர் அமர்வாய்        போற்றி ஓம்
ஓம் ஒற்றுமை சொல்வாய்        போற்றி ஓம்
ஓம் உயர்நெறி தருவாய்        போற்றி ஓம்   
ஓம் நித்தமும் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் நேரமும் ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் பத்தினி பணிந்தோம்        போற்றி ஓம்
ஓம் பாரமே உனகே            போற்றி ஓம்
ஓம் வித்தையே விளக்கே        போற்றி ஓம்
ஓம் விந்தையே தாயே            போற்றி ஓம்
ஓம் ஏழையர் அன்னை            போற்றி ஓம்   100.

ஓம் ஏங்குவோர் துணையே        போற்றி ஓம்
ஓம் காலனைப் பகைத்தாய்        போற்றி ஓம்
ஓம் கண்மணி ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் சத்தியப் பொருளே        போற்றி ஓம்
ஓம் சங்கடந் தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவச் சுரங்கமே        போற்றி ஓம்
ஓம் தாய்மையின் விளக்கமே        போற்றி ஓம்
ஓம் ஆறாதார நிலையே        போற்றி ஓம்        108.

ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்   ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்   ஓம் சக்தி ஓம்
அம்பிகையின் பாடல்கள்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் பாடல்கள்
பாடல்  -  1

இராகம்:  பாகேசி                தாளம்:  ஆதி
பல்லவி
பணிசெய் பத்தர்கள் போற்றிப் பரவுமிடம்
பணிப்புல நற்பதியே ஸ்ரீ முத்துமாரியை
(பணி......)

அனுபல்லவி
பிணிகளைத் தீர்க்கும் பெம்மான் இறைவியை
மணியொலி நாதத்தில் மங்களத்துதிபாடும்
(பணி......)

சரணம்  1
வேதங்கள் ஒலித்திட வேண்டும் வரந்தரும்
நாதசொ ரூபியை நாரணி காளியை
பாதது திசெது பாடிப்ப ரவிநின்று
ஓதும்ம றைகளின் உட்பொருளை உணர்த்த
(பணி......)

சரணம்  2
ஆடிப் பூரத்தில் அன்னையைப் போற்றிசெய்து
கூடிக் கொலுவிருத்தி குங்குமப் பொட்டுமிட்டு
ஆடியும் பாடியும் ஆரத்திகள் எடுத்தும்
நாடிடும் பத்தருக்கு நல்லமுதுந் தரும்
(பணி......)

பாடல்  -  2
இராகம்:  நடைபைரவி        தாளம்:  ஆதி
பல்லவி
பாணர் பணிந்தேத்த பரமப தம் அருளும்
பணிப்பு லத்து நாயகியே உமையே -  யாழ்ப்

அனுபல்லவி
வானவர் தானவர் வலம்வந்து மலர்சொரிய
ஞானநடம்புரியும் ஆரணி நீ பூரணி நீ

சரணம்  1
கவினுறு கீதங்கள் களிப்புடன் பாடிட
புவியிலுள் ளோர்க்கருளும் புராதனி நீ - என்
நாவில் நடம் புரிந்து நற்றமிழ்ப் பண்பாடும்
பாவினால் நிதந்துதிக்க வரமருள்வாய்

சரணம்  2
பத்தரும் சித்தரும் முத்தரும் போற்றிநின்று
நித்தியத் துதிபாடும் உந்தன் அழகை
எத்திசை சென்றாலும் எண்ணியே நான் பாட
சித்திகள் யாவும் தந்தே துணையிருப்பாய்

சரணம்  3
சத்திசிவ ரூபமாய் சகலரும் போற்றுகின்ற
முத்துமாரித் தாயாகி முன்நிற்பவளே  - நல்
வித்தைகள் நல்கியே சகலவளமும் தந்து
இத்தரணியில் சிறக்கும் இன்பம் தருவாய்


ஆககம்: எஸ். சிவானந்தராஜா
செட்டி குறிச்சி
பண்டத்தரிப்பு
சுபம்
 

 

Wednesday, April 24, 2013

சித்திரபுத்திரர் பிறந்த சித்ரா பவுர்ணமி !

உலக உயிர்களின் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் இறப்புக்கு பின் அதற்கான பலன்களை பெறுகின்றனர். அதன்படி உலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடுவதற்காக சிவபெருமானால் படைக்கப்பட்டவர்தான் சித்திரபுத்திரன். இவர் எமதர்மனின் கணக்காளராக இருந்து அனைவரது பாவ- புண்ணியங்களையும் கணக்கிட்டு வருகிறார்.

அதற்கேற்ற வகையில் எமன், தண்டனைகளை வழங்கி வருகிறார். ஒரு முறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், உலக உயிர்கள் செய்யும் பாவ-புண்ணியங்கள் குறித்த கணக்கை எழுதுவதற்கு ஒருவரை நியமிக்க சித்தம் கொண்டார். அந்த எண்ணத்தை உடனடியாக நிறைவேற்றும் பொருட்டு, தன் அருகில் அமர்ந்திருந்த உமையாளிடம், தங்கப் பலகை ஒன்றை எடுத்து வரும்படி கூறினார்.

ஈசனின் சொல்லைக் கேட்டு மறுகணமே ஒரு தங்கப்பலகையுடன் வந்தார் உமாதேவி. அந்த பொற்பலகையில் அழகான ஒரு உருவத்தை வரைந்தார் சிவபெருமான். பின்னர் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்று வந்த காரணத்தால், அவர் சித்திர புத்திரன் என்ற பெயர்பெற்றார்.

ஒரு நாள் சித்திரபுத்திரனை அழைத்தார் சிவபெருமான். சித்திரபுத்திரா! உலகின் உன்னத தேவைக்காகவே நீ படைக்கப்பட்டுள்ளாய். மூவுலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடவே உன்னை உருவாக்கினேன். அதற்கான நேரம் கனிந்து வருகிறது. தேவலோக அதிபதியான தேவேந்திரன் பிள்ளை வரம் வேண்டி, தனது மனைவியுடன் என்னை நோக்கி கடும்தவம் இருந்து வருகிறான்.

இந்திரனின் மாளிகையில் காராம் பசு உருவத்தில் காமதேனு வாழ்ந்து வருகிறது. நீ அதனுடைய வயிற்றில் மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே தங்கியிருந்து குழந்தையாகப் பிறந்து வளர்ந்து வா!. பெரியவன் ஆனதும் கையிலாயம் வந்து உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி வா! என்று கூறினார்.

சிவபெருமானின் ஆணைப்படி காமதேனுவின் வயிற்றில் மூன்றே முக்கால் நாழிகை நேரம் மட்டுமே தங்கியிருந்து பிறந்தார் சித்திரபுத்திரன். அவர் பிறந்தபோது கைகளில் ஏடும், எழுத்தாணியும் வைத்திருந்தார். தேவேந்திரனும், அவன் மனைவி இந்திராணியும் குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தனர். சித்திரபுத்திரர் பிறந்த தினம் சித்ராபவுர்ணமியாகும்.

பெரியவன் ஆனதும் சித்திரபுத்திரனுக்கு, சிவபெருமானின் உத்தரவு நினைவுக்கு வந்தது. அவர் தன் படைப்புக்கான காரணத்தை தேவேந்திரனிடமும், இந்திராணியிடமும் தெரிவித்து, பின்னர் கயிலாயம் சென்று சிவபெருமானை வணங்கி நின்றார்.

அதன் பிறகு, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதும் பணியை தொடங்கினார். அன்று முதல் தனது பணியை செவ்வனே செய்து வரும் சித்திரபுத்திரர், எமதர்மனின் கணக்கராக இருந்து வருகிறார்.

விரத முறை............. சித்ரா பவுர்ணமி தினத்தில் காலையில் எழுந்து நீராட வேண்டும். பின்னர் பூஜை அறையில் கோலமிட்டு, கும்பம் வைத்து வணங்க வேண்டும். அந்த கும்பத்தில் சித்திரபுத்திரர் எழுந்தருள்வார் என்பது ஐதீகம். சித்திரபுத்திரரின் படம் வைத்திருப்பவர்கள் அவரது படத்தை வைத்து வணங்கலாம்.

சித்திரபுத்திரர் காராம் பசுவின் வயிற்றில் பிறந்தார் என்பதால், அன்றைய தினம் பசுவில் இருந்து கிடைக்கும் எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது. வழிபாட்டின் போது வைக்கப்படும் நைவேத்தியப் பொருட்களில் உப்பு சேர்க்கக்கூடாது. அன்னம், இளநீர், கொழுக்கட்டை போன்றவற்றை படைத்து வழிபடலாம்.

மேலும் வீட்டில் உள்ள பசுவை குளிப்பாட்டி, மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும். அத்துடன் பூஜையில் வைத்த நைவேத்தியத்தையும் பசுவிற்கு கொடுக்கலாம். தொடர்ந்து கோவில்கள் அல்லது வீட்டில் சித்திரபுத்திரரின் கதையை ஒருவர் படிக்க, மற்றவர்கள் கேட்பது நல்லபலனை கொடுக்கும்.

சித்ரா பவுர்ணமியானது சனி, ஞாயிறு, வியாழன் ஆகிய தினங்களில் வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி வியாழக்கிழமை வருகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்திர புத்திரரை வணங்குவதால், தோஷ நிவர்த்தி, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள் போன்றபலன்கள் கிடைக்கும்.

Thursday, November 15, 2012

48 நாள் ஐய்யப்ப விரதமும் வழிபாடு பலன்களும்!

நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. நாளை அய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க மாலை அணிய உள்ளனர். இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் கேட்டபடி இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை தேடிச்சென்று அருள் பெற்று திரும்பும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.


சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதால் பக்தர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். சபரிமலை அய்யப்பன் பற்றியும், 48 நாள் விரதம் மற்றும் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…..

சபரிமலை யாத்திரை – விரத முறைகள் சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள்.

யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கும் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.

இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத் தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும்.

பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.

1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது சாலச் சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருஉருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

மாலை அணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

4. காலை, மாலை இரு வேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருஉருவ படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதைïட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளை தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடித்து தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது, “சாமி சரணம்” என்ற தொடங்கிய பின் விடைபெறும்போது “சாமி சரணம்” எனச் சொல்ல வேண்டும்.

8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை ”மாளிகைபுறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளைக் “கொச்சி” என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

11. மாலை அணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களுக்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.

12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு “கன்னி பூஜை” நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் “கன்னி ஐயப்பன்” என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை “பழமக்காரர்கள்” என்றும் அழைக்கப்படுவார்கள்.

15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்து விட்டு “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட தகதியிலிருந்து ஐயப்பன் சன்னதிதானம் செல்லும் வரை அவர்களால் இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் கூறிக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப் பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்போது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.

நீண்ட  வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் கூறுவதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருஉருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.