Tuesday, December 24, 2013

எந்த ஓர் ஆலயத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள்தான் இருக்கும்.
ஆனால் தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆய்க்குடி எனும் கிராமத்தில் உள்ள 'ஸ்ரீ பாலசுப்ரமண்யர் ஆலய'த்தில் ஐந்து தலவிருட்சங்கள் உள்ளன. அவை அரசு, வேம்பு, மா, மாதுளை, கறிவேப்பிலை.

Monday, December 9, 2013

விளக்கேற்றுவதால் உண்டாகும் நற்பலன்கள்

காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.

சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .

மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .

பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்

மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்

நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்

ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

யாருக்கு என்ன எண்ணெய்

(விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)

கணபதி - தேங்காய் எண்ணெய்

நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்

மகாலட்சுமி - பசுநெய்

குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்

ருத்திரர் - இலுப்பெண்ணெய்

பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

எண்ணையும் அதன் பயன்களும்

விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்

பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.

நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது

ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.

இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும்
இடத்துக்கும் விருத்தி உண்டு

கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்

கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்

மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்

தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.

வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்

ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்

திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்

வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்

சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை.

இதற்கு ஒரு காரணமும் உண்டு.

திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள்.

எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வீட்டில் மங்களம் நிலைக்கும்.

* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி மனச் சாந்தி உண்டாகும். புத்திரபேறு உண்டாகும்.

* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.

* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும்.

* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வளம் பெருக்கும் அகல்:

கார்த்திகை மதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.

இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம்.

அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு.

வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு

விளக்கேற்றும் திசைகள்

1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.

2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.

3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.

4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது

விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.

1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும்.
மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.

4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.

5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.

6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும்.

இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.

ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது.

பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது.

எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.

இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்...

Friday, December 6, 2013

அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில் வரலாறு ! (வீடியோ இணைப்பு)

மூலவர்    :மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
பழமை    : 500 வருடங்களுக்குள்
ஊர்    : மேல்மருவத்தூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம்    : தமிழ்நாடு








அமர்ந்த கோலம்:

அன்னை ஆதிபராசக்தியின் சிலை மூன்றடி உயரம் உள்ளது. தாமரை பீடத்தில் வலதுகாலை மடக்கியும், இடது காலை ஊன்றியும் அமர்ந்திருக்கிறாள்.

இடக்காலை ஊன்றியிருப்பதன் மூலம் அனைத்திலும் முதன்மை தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதும் உணர்த்தப்படுகிறது. அவள் தனது வலது கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்திருயிருக்கிறாள். பொதுவாக அம்மாள் சிலைகளுக்கு நான்கு, எட்டு என கரங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை பராசக்தி மானிட வடிவத்தில் அருள் பாலித்த இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கரங்களுடன் படைப்பது வழக்கம்.

தாமரை பீடம்:

அன்னை ஆதிபராசக்தி அமர்ந்துள்ள தாமரை பீடம், இருதய கமலம். நெஞ்சத்தாமரை என்று கூறப்படுவது போல உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதை உணர்த்துகிறது. தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன.

அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை அக மனம், புறமனம் என்றும் கூறலாம். நம் புறமனம் உலக இன்பங்களில் ஈடுபட்டு, அமிழ்ந்து கீழ்நோக்கி இருக்கிறது.

அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதைக் குறிக்கிறது. அன்னையின் இடக்கால் கீழ்நோக்கி புற இதழ்களின் மேல் படிந்துள்ளது. அதாவது உலக இன்பங்களில் மூழ்கியுள்ள மக்கள் அழிந்துவிடாமல் அவர்களை காக்க அன்னை தனது திருவடிகளை தந்திருக்கிறாள் என புரிந்துகொள்ளலாம்.

சிறப்புகள்:

பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர்.

பிரார்த்தனை:

அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: 

பக்தர்கள் அம்மனுக்கு சக்திமாலை அணிவித்து இருமுடி எடுத்தும், அங்கப்பிரதட்சிணம் செய்தும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் ஆடிமாதம் மருவத்தூர் அம்மனுக்கு ஆடி கஞ்சி எடுத்தல் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் செந்நிற ஆடை உடுத்தி இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள்.

திருவிழா: 

ஆடிப்பூரம், தைப்பூசம், பங்காரு அடிகளாரின் பிறந்தநாள்(மார்ச் 3), நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விழாக்காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில் மற்றும் பஸ் வசதி செய்யப்படுகிறது.

கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரையும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில் மேல்மருவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.  

தொடர்பு கொள்ள : +91 44-27529217

போக்குவரத்து வசதி:

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் மேல் மருவத்தூர் கோவிலுக்கு செல்லும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.

Saturday, November 30, 2013

இறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்?

இப் பூவுலகில் வாழும் மக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சைவம் என பல சமயங்களைச் பின்பற்றுபவர்காளக வாழ்கின்றனர். எல்லாச் சமயங்களும் வாழ்கையை நல்ல முறையில் பயனுள்ளதாக அமைவதற்கான நெறிமுறைகளையும், சமய அனுட்டானங்க்களையுமே போதிக்கின்றன. 


அவற்றுள் சைவ சமயம் மட்டுமே கர்ம வினைகள் பற்றியும் அதன் காரணமாவே பிறப்பு, இறப்பு நிகழ்கின்றது என்றும், ஒருவருடைய இறப்பின் பின் என்ன நிகழும் என்பது பற்றியும் பேசுகின்றது.



விளக்கமாக கூறுவதாயின் ஒருவருடைய மரணத்தின் பின் என்ன நிழும்? ஏன் அவ்வாறு நிகழ்கின்றது? என்பதை பற்றி சைவ சமயம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மரணத்தின் பின் என்ன நிகழும் என்பதை அறிவியலாலும், மற்றைய சமயங்களினாலும் இதுதான் நடக்கும் என கூற முடியாத நிலையில் சைவ சமயம் இதுதான் நிகழும் என உறுதியாக கூறுகின்றது.


ஆன்மா அழிவில்லாதது என்றும் அவை கர்ம வினைகளால் பீடித்து இருக்கும்போது ஜீவாத்மாவாக ஏழுவகையான (ஒவ்வொரு வகையிலும் பல கோடி) பிறப்புக்களை எடுக்கின்றன எனவும், அதனை பீடித்துள்ள கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பு அமையும் எனவும் நாம் சைவசமய நூல்களில் படித்திருக்கின்றோம். ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பதும் நியதி.


எப்பொழுது அந்த ஜீவாத்மா தன்னைப் பீடித்திருக்கும் கன்ம விணைகளை தீர்த்து பரிசுத்த ஆத்மாவாக திகழ்கின்றதோ அப்போது அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றது என சைவ சமயம் கூறுகின்றது. இதனை திருமூலர் "உரையற்று, உணர்வற்று" என்னும் பாடலில் உயிரானது "உயிர் - பரம் அற்ற நிலை" எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயிரானது உயிரின் தன்மை அற்றதாகவும், பரமாத்மாவின் தன்மை அற்றதாகவும் இரண்டும் இணைந்து பேரானந்த நிலையை அடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.


ஈமைக்கிரியை செய்வதற்கான காரணம்:

ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது ஒரு ஆன்மாவின் பிரிவில் அந்த ஆன்மாவுக்காக அவரின் வாரிசுகள் செய்யும் இறுதிக் கிரியைகள் பிரிந்து சென்ற ஆன்மாவுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும்? என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஒருவர் வாய் மூலமாகவும், மனம் மூலமாகவும், உடம்பு மூலமாகவும் மூன்று விதமாக கன்ம வினைகளை செய்கின்றார். ஒருவர் செய்யும் தீவினையானது இரு சந்தற்பங்களில் நிகழ்கின்றன. அதாவது தான் செய்யும் செயல் பாவமானது என அறிந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது. இவற்றுள் தாம் பாவம் செய்வதாக அறிந்தும். செய்யும் பாவமானது அவர் அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் பாவச்செயல் என அறியாது தற்சமயம் நிகழ்ந்த பாவ வினைகளாயின் அவற்றை அவரின் வாரிசுகளினால் அவருக்காக செய்யப் பெறும் இறுதிக் கிரியை, அந்தியேட்டி  கிரியைகளினால் நிவர்த்தியாகின்றன என சைவசமயம் கூறுகின்றது. அதனாலேயே நம் மூதாதையினர் ஈமைக் கிரியைகளையும், அந்தியேட்டிக் கிரியைகளையும் செய்து வந்துள்ளனர்.

அந்தியேட்டிக் கிரியை செய்வதற்கான காரணம்:

ஆலயங்களில் மஹோற்சவிழாக்கள் நடைபெறுவதை நாம் எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவை ஆலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய பூசைகளின்போது எம்மை அறியாது ஏதாவது குறைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே மஹோற்சவ விழாக்கள் நடாத்தப்பெறுவதாக சைவசமயம் கூறுகின்றது.

அது போலவே,ஒருவருடைய மரணம் என்பதும் (முதியவராகிலும், இளையவராகிலும்,நோய்வாய்ப்பட்டவராகிலும்) எதிர்பாராத நேரத்தில் நிகழ்வதாகும். அதனால் சிலவேளைகளில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளில் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யவே அந்தியேட்டி கிரியைகள் செய்யப் பெறுகின்றன. 

அந்தியேட்டிக் கிரியை, ஈமைக் கிரியை போன்றே நிகழ்த்தப் பெறுதல் இதனை ஊர்யிதம் செய்கின்றது.   அதாவது பூதவுடலுக்குப் பதிலாக 36 தற்பைப் புல்லினால் செய்யப் பெற்ற உருவம் வைத்து அதனை இறந்தவரின் உடலாக ஆவகணம் செய்து அதற்கு பூசைகள் செய்து அந்த உருவம் தகனம் செய்யப்பெறுகின்றது. எனவே இதுவும் ஒருவகையில் மரணகிரியையே.


ஈமக்கிரியைகள் யாவும் சைவக்குருமார் மூலமே செய்யப் பெறுகின்றது. அதுபோல் அந்தியேட்டிக் கிரியையும் மரணச் சடங்கிற்கு நிகரானதாக இருப்பதனால் சைவக்குருமாரே செய்வது வழக்கம். அத்துடன் ஒருவருடைய மரணக் கிரியை செய்தவரே அந்தியேட்டிக் கிரியை செய்யும்போது தவறுகள் நிவர்த்தியாகுவதாக ஐதீகம். மரணக் கிரியையும், அந்தியேட்டிக் கிரியையும் அபரகிரியைகளாக அமைவதால் மரணக் கிரியை, அந்தியேட்டிக் கிரியைகளை செய்யும் சைவக்குருமார்  ஆலயங்களில் செய்யப் பெறும் சுப கிரியைகள் செய்வது தவிர்க்கப் பெற்றுள்ளது.  

பிதிர் வழிபாடு செய்வதற்கான காரணங்கள்:

இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்; "தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'' பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்திற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்.

தென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

இறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது. இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால் சிரார்த்தம் அல்லது திவசம் என்று அழைக்கப்பெறுகின்றது. மாதா மாதம் வரும் அமாவாசையில் எள்ளும் நீரும் இறைத்து வழிபடுவது புரோகிதருக்கு அரிசி காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.

இவை தவிர; பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாதி மாதம்பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.


இது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா உறவினர்க்கும் விருந்தளிப்பது  போன்ற ஒரு ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப் படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் வழக்கமாக நடைபெறும் மஹாளய ஆராதனையாகு,இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம் முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய அனுட்டானங்களாகும்.


இவை யாவும் இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பது ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு, மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து; புரட்டாதிமாதம் (மஹாளய னக்ஷம்) பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம். 


மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

இறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ
(தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.
நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக் கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு செய்யுங்கள் என கூறுவார்.

இதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே மேலே கூறியவாறு செய்கின்றோம். கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.

ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது.

இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.

திருவெம்பாவை - மார்கழி நோன்பு - மார்கழி தோச்சல் விரத மகிமையும் அதன் சிறப்பும் !

திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். இவ்விரதம் இவ் வருடம் 09.12.2013 அன்று ஆரம்பமாகின்றது என சோதிடம் கணித்துள்ளது. ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.




மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம்; திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.

மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்களாலும், "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது.

சைவகன்னியர்கள்; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி  உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக" அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள  மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.

மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும்  மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.

மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ''அம்பா ஆடல்'' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை.  இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழைத் தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது

பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம்  கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது  அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .

வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.

மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய "திருவெம்பாவை"யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய "திருப்பாவை" யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பெறுகின்றன.

பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் இந் நோன்பு வருடாவருடம் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. அதிகாலை 4 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி நடைபேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புராணக் கதைகள்:
கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் தேரில் ஆரோகணித்து வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இன்றும் செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

சேந்தனார்  ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே "ஆர்த்திரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

இவ் விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் ”பாரணை” செய்வர்.

Friday, November 22, 2013

சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்

பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் வள்ளலாக விளங்கும் ஐயப்ப சுவாமியின் கோயில், கேரள மலைப்பகுதியில் உள்ளது. எருமேலியிலிருந்து நாற்பத்திரண்டு மைல் தொலைவில் மலை, ஆறுகள் சூழ அமைந்துள்ளது. சோலைகளுக்கும் உயர்ந்த மேடு, பள்ளங்களுக்கும் இடையில், நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் சுவாமியின் சந்நிதானம் அமைந்துள்ளது.
சபரிமலை குளிரான மலைப்பிரதேசம், அதிலும் பயண காலமோ மிகவும் பனியும் குளிருமான மார்கழி மாதம்; பாதை மிகவும் கரடு முரடானது; வழியெங்கும் கொடுந்தன்மையுள்ள மிருகங்கள் வாழ்கின்றன. ஆதலால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் விரதங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும், ‘சாமிசரணம்’ என்று வாய்த்த நேரமெல்லாம் உரு ஜெபித்து, இரண்டு மாதகாலம் மனத்தைப் பண்படுத்தி வர வேண்டும். உரு ஜெபிக்க ஜெபிக்க ஒருவித சக்தி தோன்றும்.

1.சபரிமலைச் செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ, 19ம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் அணிந்தால் அன்றைக்கு நல்லநாள்தானா என்று நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து அணிய வேண்டும்.

2.மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ, ருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தங்கள் தாய் தந்தையின் நல்லாசியுடன் ஐயப்ப பக்தி நிறைந்தவரும் ஐயனின் அவதார தல மகிமைகளை அறிந்து ஒழுகும் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலையை அணிய வேண்டும்.

4. இவ்வாறு மாலை அணிந்தபின் புலால் உண்ணுதல், மது அருந்துதல் கூடாது, கோபதாபம் குரோதம் விரோதம் கொள்ளக்கூடாது.

5. பெண்களைப் (ஆசையுடன்) பார்த்தல், நினைத்தல், விரும்புதல், பேசுதல் ஆகியவை கண்டிப்பாகக் கூடாது.

6. மாலை அணிந்தவர்கள் நீலம், கருப்பு, காவி, மஞ்சள், பச்சை, சிவப்பு ஏதாவது ஒரு வண்ணத்தில் வஸ்திரம் தரிக்க வேண்டும்.(முதல் ஆண்டு மாலை அணிபவர்கள் கருப்புநிற வஸ்திரம் தரிக்க வேண்டும், அவர்கள் கன்னி சுவாமிகள் என்று அழைக்கப்படுவர்.)

7. தீட்சை வளர்த்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

8. மற்றவர்களிடம் பேசும்போது ‘சாமிசரணம்’ எனத் தொடங்கி விடை பெறும்பொழுது ‘சாமிசரணம்’ எனக் கூற வேண்டும்.

9. காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்துக் கோயில்களிலோ, வீடுகளிலோ விநாயகரை வழிபட்டு ஐயப்பன் சரணங்கள் கூறி, வணங்க வேண்டும். (புதன், சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்ய உகந்த நாளாகும்.)

10. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும் பெண்களை மாளிகைப் புறத்து அம்மனாகவும் கருதிப் பழக வேண்டும்.

11. மாலையணிந்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பஜனை நடத்தியும் பூஜை செய்யும் ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம். கன்னி சுவாமிகள் இவ்வாறு செய்வது மிகவும் பயன்தரும்.

12. படுக்கை விரிப்பு தலையணை நீக்கி, தான் உபயோகப்படுத்தும் துண்டை மட்டும் தரையில் விரித்துப் படுக்க வேண்டும்.

13. காலணிகள், குடை போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

14. மரணம் போன்ற துக்க நிகழ்ச்சிகளில் ஐயப்பமார்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ளக் கூடாது. பங்காளிகள், தாயாதிகள் வீடுகளில் இவ்விதம் நேர்ந்து விட்டால், தான் அணிந்துள்ள மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகுதான் கலந்து கொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்து விட்டால் மறுவருடம்தான் மாலையணிந்து செல்ல வேண்டும். சடங்கு(ருதுமங்கள) வீடுகளுக்குச் செல்லக்கூடாது.

15. இரு முடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

16. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

17. முதன் முதலாக மாலை அணிந்துள்ள கன்னிசாமிகள் கூட்டுச் சேர்ந்துள்ள சாமிகளோடு பஜனை செய்து, கன்னி பூஜை செய்ய வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் செல்லுவதே நன்மை பயக்கும்.

18. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக் கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

19. யாத்திரை முடிந்து விடு திரும்பியதும் ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்தியபடியே வீட்டு வாயில் படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

20. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கட்டினைப் பிரித்தப் பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

21. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்தில் மாலையை அணிவித்துவிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

22. பூஜையில் அமரும்பொழுது விநாயகர், முருகர், மீனாட்சி, தங்களின் குலதெய்வம் இவர்களை ஸ்தோத்திரம் செய்து விட்டு ஐயப்பன் சரணகோஷம் போடவேண்டும். பஜனையில் பதினெட்டாம் பாட்டைக் கடைசியில் பாடி மங்களம் பாட வேண்டும். இருமுடி கட்டும் முறைகளையும் இருமுடிக்கு வேண்டிய பொருள்களையும் பயணத்துக்குத் தேவையான பொருள்களையும் மாலை அணிவித்த குருநாதரைக் கேட்டு அதன்படி தயார் செய்துகொள்ளவும்.

Thursday, November 21, 2013

இந்தியாவின் பொக்கிஷமாக திகழும் சில பணக்கார கோவில்கள் (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் தெய்வ நம்பிக்கைகள் அதிகம் உள்ளன. அதற்கேற்றாற் போல் கோவில்களும் நிறைய உள்ளன. அதுவும் தெருவோரத்தில், மரத்தின் அடியில், ஏன் எங்கு திரும்பினாலும் சிறு கோவில்களை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பிரபலமானதாக இருப்பதில்லை.
இருப்பினும் ஒருசில கோவில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷம் போன்றும் இருக்கின்றன. ஏனெனில் அத்தகைய கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது.


எனவே அந்த கோவில்களுக்கு தினமும் நிறைய பேர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதனால் அந்த கோவில்களுக்கு நிறைய நன்கொடைகளும் வரும். இந்த நன்கொடைகளால் கோவில்களை பலவாறு மேம்படுத்துகின்றனர். இப்போது இந்தியாவின் பொக்கிஷமாக இருக்கும் சில பணக்கார கோவில்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, செல்லாத கோவில்களுக்கு உடனே சென்று வாருங்கள்...


பத்மநாபசுவாமி கோவில்


கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கோவிலில் பல கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் பிரபலமான கோவிலாகும்.






திருமலை திருப்பதி


ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் இரண்டாவது பணக்கார கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு 650 கோடிக்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் உள்ளது. எனவே தான் இந்த கோவில் பணக்கார கோவில்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.



வைஷ்ணவ தேவி கோவில்


இந்த கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள கோவில்களுள் ஒன்றாகும். இங்கு மாதா தேவியின் ஆசியைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.




சித்தி விநாயகர் கோவில்


இது மற்றொரு பணக்கார கோவிலாகும். இந்த கோவிலில் நிறைய பாலிவுட் நடிகர், நடிகைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு நன்கொடையாக 3.5 கிலோ தங்கத்தை கொல்த்தாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளார். இதனை வைத்து இந்த கோவிலின் குவிமாடம் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.




ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில்


சீக்கிய யாத்ரீகத்தில் மிகவும் பிரபலமானதாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில் உள்ளது. இந்த கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் 'ஆதி கிரந்த' (குரு கிரந்த சாஹிப்) விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதித்தார்.




சோம்நாத் கோவில்


பல முறை அழிக்கப்பட்டும், ஜோதிலிங்கம் இன்றும் ஆன்மீக பக்தர்கள் செல்லும் தளங்களுள் ஒன்றாக உள்ளது.




பூரி ஜெகன்னாத்


ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பூரியில் உள்ள மிகவும் பழமையான கோவில் தான் ஜெகன்னாத். இதுவும் செல்வம் அதிகம் பொங்கும் கோவில்களுள் ஒன்றாகும்.





காசி விஸ்வநாதர் கோவில்


வாரணாசியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் பணக்கார கோவிலில் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் முக்கியமானது.





மதுரை மீனாட்சி அம்மன் கோவில்


தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பணக்கார கோவில்களுள் ஒன்றானது.

Wednesday, November 20, 2013

கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் ஐப்பன் கோடி அர்ச்சனை

ஸ்ரீமத் பாகவதத்தில் பிருது மன்னனைப் பற்றிய ஒரு தகவல் உண்டு. சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகவே உதித்தவர் அவர். அவர் அவதரித்தபோது பூமியில் பஞ்சமும் பட்டினியும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. மக்கள் அடிப்படை தேவைகளுக்கே வழியில்லாமல் கிடந்தனர். பசுவிற்குள் இருக்கும் பாலாக, பூமிக்குள் ஒடுங்கியிருக்கும் அனைத்தையும் பகவானின் அம்சமான பிருது மன்னன் கறந்து அளித்தான்.
எப்போதெல்லாம் வழிபாடு தர்மங்களுக்குரிய ஹோம, யாகங்கள் குறைந்து இறைவனை அர்ச்சித்தல் என்கிற செயலில் தொய்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பகவானே அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதை பிருது மன்னனின் கதை விளக்குகிறது.


அவர், அர்ச்சனை ரூபமான தர்மத்தை கையாண்டு பூமியிடமிருந்து சகல செல்வங் களையும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். எனவே அவருக்கு ‘பூமியைக் கறந்த பிருது மன்னன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இப்படியாக அர்ச்சனை, ஹோமங்கள் மூலமாக அவர் அள்ளிக் கொடுத்ததால், மகாலட்சுமி அம்சமான அவருடைய மனைவிக்கு அர்ச்சிஸ் என்கிற பெயர் வந்தது. இந்த திவ்ய தம்பதியினர் ஆதியில் உலகிற்கு காட்டிய தர்மமே அர்ச்சனை எனும் உயர்ந்த விஷயமாகும். அந்த மிக உயர்ந்த தர்மமானது இப்போது கோடி அர்ச்சனையாக கலியுகக் கடவுளான ஸ்ரீ ஐயப்பனுக்கு சென்னை - நங்கநல்லூர் தலத்தில் செய்யப்படவிருக்கிறது என்பது நம்முடைய பெரும் பாக்கியமாகும்.


1990ம் ஆண்டு விளக்கு பூஜைக்காக ஐயப்பனுடைய விக்ரகத்தை பம்பையில் ஆராட்டு நடத்தி ஐயனின் 18 படியேறி, அதற்கு சந்நதியிலுள்ள விபூதி சாத்தப்பட்டது. பிறகு 1995ம் வருடம் ஐயப்பனுக்கு கோயில் கட்ட அஷ்டமங்கள பிரசன்னம் பார்த்ததில் இக்கோயில் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்புறம் அமையுமென்று கணிக்கப்பட்டது. அதன்படி ஐயப்பனின் திவ்ய விக்ரகம் ஐயனின் சங்கல்பத்தாலும், பேரருளாலும் நன்முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே இன்று ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் என்றழைப்படுகிறது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், சபரிமலையிலுள்ள சந்நிதானத்தின் நடையை அடைத்தபின் இத்தலத்தில் இருந்தும் ஸ்ரீ ஐயப்பன் அருள்பாலிக்கிறார் என்று பிரசன்னத்தின்போது அறியப்பட்டது.


இப்பேற்பட்ட அரியதும் அபூர்வமான இந்தக் கோயிலில் உலக நலனை முன்னிட்டும் குருசாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும் ஆங்காங்கு இருக்கும் ஐயப்பனின் பக்த குழுக்கள் அனைத்தும் இணைந்து ஒரு கோடி அர்ச்சனை வைபவத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த அற்புத கோடி அர்ச்சனை வைபவம் 7.12.2013 முதல் 22.12.2013 வரை நங்கநல்லூர் 32 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீசபரி சைதன்ய க்ஷேத்திரம் எனும் இக்கோயிலில் நடத்தப்பட உள்ளது. அதிலும் ஸ்ரீஐயப்பனுக்கு மிகவும் உகந்த மண்டல பூஜை காலமாகிய கார்த்திகை - மார்கழி மாதங்களில் நடைபெறுவதென்பது ஐயப்ப பக்தர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.

Friday, November 8, 2013

திருக்கார்த்திகை தீபம் - விளக்கீடு - 17.11.2013

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைவதாக கணிக்கின்றது.



கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும். [அருணம், சோணம் - சிகப்பு நிறம்]


"ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.

திருவண்ணாமலை புண்ணிய பூமி. ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,  தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.
அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தைத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் ருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்டிச்சியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
யோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைக் திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.

காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!
திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி!
 

 

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீ
கம்.

இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.  ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.  "உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே."




அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.




சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாருர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு,ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.


உலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர். திருவாரூரில் பிறந்தலே  முத்தி கிடைக்கும் என்பர். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடி மனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.




பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது.
அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.


அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.


சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.




சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.
எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்த் கேட்டான். திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில்,' கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள்.  வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்: கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந: பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா. இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம்.

தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக.

Thursday, November 7, 2013

ஆறுமுகன் அவதாரம் !

திருக்கயிலையில் சிவபெருமான், பார்வதி தேவியுடன் வீற்றிருந்தார். அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து சூரபத்மன் போன்ற அசுரர்களால் தாங்கள்படும் இன்னல்களை சிவபெருமானிடம் கூறி முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் ஆறுதிருமுகங்களுடன் தோன்றினார்.





அவர் ஆறுமுகங்களாலும் பார்வதியை பார்த்ததும் அவரது ஆறு நெற்றிக் கண்ணில் இருந்தும் சூர்ய ஒளி பொருந்திய ஆறு உருவங்கள் வெளிபட்டன. அதைக்கண்டு பார்வதி பயந்து ஓடினாள். அப்போது ஆறு உருவங்களும் சிவபெருமானுக்கு எதிரில் அடக்கமாக நின்றன.

உடனே சிவபெருமானின், அக்னி, வாயுதேவர்களை அழைத்து "நீங்கள் இந்த தேஜசை கங்கை நதிக்கு எடுத்து சென்று அங்குள்ள நாணல் புதரின் மத்தியில் சேர்த்து விடுங்கள்'' என்று கட்டளையிட்டார். அவர்கள் கங்கையை அடைந்து அங்கு நாணற் காட்டின் மத்தியில் தாமரை மலர்களுக்கிடையில் அந்த சிவதேஜஸ்களை மிருதுவாக வைத்தார்கள்.

உடனே அந்த ஆறு தேஜஸ்களும் ஆறு அழகிய குழந்தைகளாக மாறின. திருமால் அந்த குழந்தைகளுக்கு கார்த்திகைப் பெண்களைக் கொண்டு பாலூட்டி சீராட்டி வளர்க்கச் செய்தார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தேஜசைக் கண்டு பயந்து பார்வதி ஓடிய போது கால் இடறியதில் அவள் அணிந்திருந்த நவரத்தினச்சரம் அறுந்து ஒன்பது மணிகள் சிதறின.

அந்த ரத்தினங்களில் இருந்து ஒன்பது காளிகாஸ்திரீகள் தோன்றி அவர்கள் மூலமாக வீரபாகு முதலான வீரர்கள் பிறந்தார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி "நவ வீரர்களே, பார்வதி மைந்தனாகிய முருகனுக்குப் பணி செய்து வாருங்கள்'' என்று கூறினார்.

கங்கைப் பொய்கையில் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளைப் பார்க்க பார்வதிதேவி வந்தாள். ஆறு குழந்தைகளையும் அவள் தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்ததும் ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாயின. அப்போது முருகன் இரண்டு கால்கள், பன்னிரண்டு தோள்கள், பதினெட்டு கண்கள் கொண்ட தோற்றத்தில் விளங்கினார். 

Wednesday, November 6, 2013

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை!


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.





இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.

இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.

இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா? ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும். சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும்.

அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.
ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.

அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

கந்தசஷ்டி தோன்றிய கதை..!!!

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில்


சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.


மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.

இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.


அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.


அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.


தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான்.


 அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.


முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை


மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

மூலம்: தினமலர்

Wednesday, October 30, 2013

கேதார கௌரி விரதம் - கணவன், மனைவி ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக இணைபிரியாது வாழ வரம் தரும் விரதம் !

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்
ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.




இவ் விரதம் இவ்வருடம் 14.10.2013 திங்கட்கிழமை முதல் 03.10.2013 ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையிலும்,

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 02.11.2013 சனிக்கிழமை  வரை வட அமெரிக்காவிலும், அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம்.

கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிபதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.




இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானது சக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும்,  புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும், இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம்' பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.

கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில்
உமதேவி  சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க கிருதாசி, மேனகை முதலிய தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய அரம்பையானவள் அற்புதமான நடன விசேடங்களை நடித்துக்காட்டுகிறாள்.

அப்போது அந்தரங்க பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள். பார்வதக்குகை அச் சிரிப்பொலியால் கலகலவென எதிரொலிக்கின்றது. பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கௌரவித்து பாராட்டுகிறார்கள்.
இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்வேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர்.

ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் "பிருங்கி முனிகள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.

பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் அர்த்தபுஷ்டியான ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார். தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாத மேலும் கோபமுற்றவளாக எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.

ஆதலால் "நிற்க முடியாமல் போகக் கடவாய்' என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். இந்நிலையில் என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆச்சிரமத்தை அடைந்தார்.

இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை எனக் கூறி கைலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஓர் விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியின் திருப்பாதங்கள்
அவ்வனத்தில் பட்டதும், மரஞ் செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று தளிர்த்தன. மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹாரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆச்சிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.

முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! முக்கண்ணரின் தேவியே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவியே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.

அதற்கு பார்வதி தேவி "பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து மிகவும் நீண்ட தூரம் வந்து விட்டேன்” என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.

வால்மீகி முனிவர்
பரமேஸ்வரியை தனது ஆச்சிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே (தற்போது தென் இந்தியாவில் உள்ள மாங்காட்டு அம்மன் ஆலயம்) வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.

தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் "கேதார கௌரி விரதம்" எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.

புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் என்பவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும் என்று கூறினார். சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் தேவி? எனக் கேட்டார். அப்போது "இமைப் பொழுதும் உமைப் பிரியாத வரம் வேண்டும் சுவாமி" என்றார். தந்தோம் தேவி என தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கைலாயம் சென்றார். இறைவி இவ் விரதத்தை அனுஷ்டித்தமையால் ஓர் உயிரும் ஓர் உடலுமாக இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகின்றன.
இவ்விரத முடிவில் 21 இழையினால் ஆன காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கையிற்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்டுதல் வேண்டும். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.




இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று, அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'


கேதாரகௌரி விரதம அனுட்டிக்கும் முறை:
கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகைசமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசனை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.

விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றைமடடுமே அருந்தி தெய்வசிநதனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக்கயிற்றில் இருக்கும் 21 முடிச்சுக்களுக்குமுரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம்செய்து கும்பத்துக்கு மலர்சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.

இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை கேதாரிகௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றையதினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குருவழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல் ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை.
இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனைவருடகாலம் மட்டுமே அனுஷ்டிக்கவேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிபத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜைவழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல.

ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:




புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு.
தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
 
கௌரிக் காப்புத் தோத்திரம்
 
தேவி துணை
ஓம் சக்தி ஓம்
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.

வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்
திருச்சிற்றம்பலம்

இவ்விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
தேவாரம்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
- திருஞானசம்பந்தர்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

துர்க்கை அம்பாள் போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி     4.

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி           8.

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி              12.

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி            16.

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி       20.

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி            24.

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி             28.

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி             32.

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி             36.

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி         40.

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி              44.

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி           48.

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி  52.

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி         56.

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி                60.

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி           64.

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி           68.

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி         72.

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி              76.

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி          80.

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி                   84.

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி        88.
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி   92.

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி                 96.

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி       100.

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி        104.

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி             108. 

மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும்
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி         20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி     70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி   90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி  100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.
மேல் மருவத்தூர் அம்பிகையின் 108 போற்றிகள்
ஓம் ஓம்சக்தியே             போற்றி ஓம்
ஓம் ஓங்கார ஆனந்தியே        போற்றி ஓம்
ஓம் உலக நாயகியே            போற்றி ஓம்
ஓம் உறவுக்கும் உறவானவளே    போற்றி ஓம்
ஓம் உள்ளமலர் உவந்தவளே        போற்றி ஓம்
ஓம் ஓதரிய பெரும் பொருளே        போற்றி ஓம்
ஓம் உண்மைப் பரம் பொருளே    போற்றி ஓம்
ஓம் உயிராய் நின்றவளே        போற்றி ஓம்
ஓம் மருவத்தூர் அமர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் மனமாசைத் துடைப்பாய்        போற்றி ஓம்        10.

ஓம் கவலை தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் ககனவெளி ஆனாய்        போற்றி ஓம்
ஓம் புற்றாகி வந்தவளேஓம்        போற்றி ஓம்
ஓம் பாலாகி வடிந்தவளே        போற்றி ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய்        போற்றி ஓம்
ஓம் பண்ணாக இசைந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாமலர் உவந்தாய்        போற்றி ஓம்
ஓம் பாம்புரு ஆனாய்            போற்றி ஓம்
ஓம் சித்துரு அமைந்தாய்        போற்றி ஓம்
ஓம் செம்பொருள் நீயே        போற்றி ஓம்        20.

ஓம் சக்தியே தாயே            போற்றி ஓம்
ஓம் சன்மார்க்க நெறியே        போற்றி ஓம்
ஓம் சமதர்ம  விருந்தே        போற்றி ஓம்
ஓம் ஓங்கார உருவே            போற்றி ஓம்
ஓம் ஒருதவத்துக் குடையாய்        போற்றி ஓம்
ஓம் நீள்பசி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் நின்மதி தருவாய்            போற்றி ஓம்
ஓம் அகிலமே ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் அண்டமே விரிந்தாய்        போற்றி ஓம்
ஓம் ஆன்மீகச் செல்வமே        போற்றி ஓம்        30.

ஓம் அனலாக ஆனாய்            போற்றி ஓம்
ஓம் நீராக நிறைந்தாய்            போற்றி ஓம்
ஓம் நிலனாகத் திணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தூறாக வளர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் துணிபொருள் நீயே        போற்றி ஓம்
ஓம் காராக வருவாய்            போற்றி ஓம்
ஓம் கனியான மனமே            போற்றி ஓம்
ஓம் மூலமே முதலே            போற்றி ஓம்
ஓம் முனைச்சுழி விழியே        போற்றி ஓம்
ஓம் வீணையே இசையே        போற்றி ஓம்        40.

ஓம் விரைமலர் அணிந்தாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவங் கடந்தாய்        போற்றி ஓம்
ஓம் சகலமறைப் பொருளே        போற்றி ஓம்
ஓம் உத்தமி ஆனாய்            போற்றி ஓம்
ஓம் உயிர்மொழிக் குருவே        போற்றி ஓம்
ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய்        போற்றி ஓம்
ஓம் நீள் நிலத் தெய்வமே        போற்றி ஓம்
ஓம் துரிய நிலையே            போற்றி ஓம்
ஓம் துரிய தீத வைப்பே        போற்றி ஓம்
ஓம் ஆயிர இதழ் உறைவாய்        போற்றி ஓம்    50.

ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய்    போற்றி ஓம்
ஓம் கருவான மூலம்            போற்றி ஓம்
ஓம் உருவான கோலம்        போற்றி ஓம்
ஓம் சாந்தமே உருவாய்        போற்றி ஓம்
ஓம் சரித்திரம் மறைத்தாய்        போற்றி ஓம்
ஓம் சின்முத்திரை தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் சினத்தை வேரறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கையிரண்டு உடையாய்        போற்றி ஓம்
ஓம் கரைபுரண்ட கருணை        போற்றி ஓம்
ஓம் மொட்டுடைக் கரத்தாய்        போற்றி ஓம்        60.

ஓம் மோனநல் தவத்தாய்        போற்றி ஓம்
ஓம் யோகநல் உருவே            போற்றி ஓம்
ஓம் ஒளியன ஆனாய்            போற்றி ஓம்
ஓம் எந்திரத் திருவே            போற்றி ஓம்
ஓம் மந்திரத் தாயே            போற்றி ஓம்
ஓம் பிணி தவிர்த்திடுவாய்        போற்றி ஓம்
ஓம் பிறவிநோய் அறுப்பாய்        போற்றி ஓம்
ஓம் மாயவன் தங்கையே        போற்றி ஓம்
ஓம் சேயவன் தாயே            போற்றி ஓம்
ஓம் திரிபுரத்தாளே            போற்றி ஓம்        70.

ஓம் ஒருதவம் தெரிப்பாய்        போற்றி ஓம்
ஓம் வேம்பினை ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் வினையெலாம் தீர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் அஞ்சனம் அருள்வாய்        போற்றி ஓம்
ஓம் ஆருயிர் மருந்தே            போற்றி ஓம்
ஓம் கண்ணொளி காப்பாய்        போற்றி ஓம்
ஓம் கருத்தொளி தருவாய்        போற்றி ஓம்
ஓம் அருளொளி செய்வாய்        போற்றி ஓம்
ஓம் அன்பொளி கொடுப்பாய்        போற்றி ஓம்
ஓம் கனவிலே வருவாய்        போற்றி ஓம்        80.

ஓம் கருத்திலே நுழைவாய்        போற்றி ஓம்
ஓம் மக்கலைக் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனநோயைத் தவிர்ப்பாய்    போற்றி ஓம்   
ஓம் எத்திசையும் ஆனாய்        போற்றி ஓம்
ஓம் இதயமாம் வீணை            போற்றி ஓம்
ஓம் உருக்கமே ஒளியே        போற்றி ஓம்
ஓம் உள்ளுறை விருந்தே        போற்றி ஓம்
ஓம் மலப்பிணி தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் மனங்கனிந்து அருள்வாய்    போற்றி ஓம்
ஓம் நாதமே நலமே            போற்றி ஓம்        90.

ஓம் நளின மலர் அமர்வாய்        போற்றி ஓம்
ஓம் ஒற்றுமை சொல்வாய்        போற்றி ஓம்
ஓம் உயர்நெறி தருவாய்        போற்றி ஓம்   
ஓம் நித்தமும் காப்பாய்        போற்றி ஓம்
ஓம் நேரமும் ஆள்வாய்        போற்றி ஓம்
ஓம் பத்தினி பணிந்தோம்        போற்றி ஓம்
ஓம் பாரமே உனகே            போற்றி ஓம்
ஓம் வித்தையே விளக்கே        போற்றி ஓம்
ஓம் விந்தையே தாயே            போற்றி ஓம்
ஓம் ஏழையர் அன்னை            போற்றி ஓம்   100.

ஓம் ஏங்குவோர் துணையே        போற்றி ஓம்
ஓம் காலனைப் பகைத்தாய்        போற்றி ஓம்
ஓம் கண்மணி ஆனாய்            போற்றி ஓம்   
ஓம் சத்தியப் பொருளே        போற்றி ஓம்
ஓம் சங்கடந் தவிர்ப்பாய்        போற்றி ஓம்
ஓம் தத்துவச் சுரங்கமே        போற்றி ஓம்
ஓம் தாய்மையின் விளக்கமே        போற்றி ஓம்
ஓம் ஆறாதார நிலையே        போற்றி ஓம்        108.

ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்   ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்   ஓம் சக்தி ஓம்
அம்பிகையின் பாடல்கள்

பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் பாடல்கள்
பாடல்  -  1

இராகம்:  பாகேசி                தாளம்:  ஆதி
பல்லவி
பணிசெய் பத்தர்கள் போற்றிப் பரவுமிடம்
பணிப்புல நற்பதியே ஸ்ரீ முத்துமாரியை
(பணி......)

அனுபல்லவி
பிணிகளைத் தீர்க்கும் பெம்மான் இறைவியை
மணியொலி நாதத்தில் மங்களத்துதிபாடும்
(பணி......)

சரணம்  1
வேதங்கள் ஒலித்திட வேண்டும் வரந்தரும்
நாதசொ ரூபியை நாரணி காளியை
பாதது திசெது பாடிப்ப ரவிநின்று
ஓதும்ம றைகளின் உட்பொருளை உணர்த்த
(பணி......)

சரணம்  2
ஆடிப் பூரத்தில் அன்னையைப் போற்றிசெய்து
கூடிக் கொலுவிருத்தி குங்குமப் பொட்டுமிட்டு
ஆடியும் பாடியும் ஆரத்திகள் எடுத்தும்
நாடிடும் பத்தருக்கு நல்லமுதுந் தரும்
(பணி......)

பாடல்  -  2
இராகம்:  நடைபைரவி        தாளம்:  ஆதி
பல்லவி
பாணர் பணிந்தேத்த பரமப தம் அருளும்
பணிப்பு லத்து நாயகியே உமையே -  யாழ்ப்

அனுபல்லவி
வானவர் தானவர் வலம்வந்து மலர்சொரிய
ஞானநடம்புரியும் ஆரணி நீ பூரணி நீ

சரணம்  1
கவினுறு கீதங்கள் களிப்புடன் பாடிட
புவியிலுள் ளோர்க்கருளும் புராதனி நீ - என்
நாவில் நடம் புரிந்து நற்றமிழ்ப் பண்பாடும்
பாவினால் நிதந்துதிக்க வரமருள்வாய்

சரணம்  2
பத்தரும் சித்தரும் முத்தரும் போற்றிநின்று
நித்தியத் துதிபாடும் உந்தன் அழகை
எத்திசை சென்றாலும் எண்ணியே நான் பாட
சித்திகள் யாவும் தந்தே துணையிருப்பாய்

சரணம்  3
சத்திசிவ ரூபமாய் சகலரும் போற்றுகின்ற
முத்துமாரித் தாயாகி முன்நிற்பவளே  - நல்
வித்தைகள் நல்கியே சகலவளமும் தந்து
இத்தரணியில் சிறக்கும் இன்பம் தருவாய்


ஆககம்: எஸ். சிவானந்தராஜா
செட்டி குறிச்சி
பண்டத்தரிப்பு
சுபம்