Saturday, December 15, 2012

புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு.

யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்ப்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன.

இவற்றிலே பன்னிரண்டு அம்மன் ஆலயங்களாக இருந்த போதிலும் அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்களாக காலப்போக்கிலே மாற்றமடைந்துவிட்டன. கண்ணகை அம்பாள், குறிகட்டுவான் மனோண்மணி அம்பாள், முத்துமாரி அம்பாள், காளிகா பரமேஸ்வரி அம்பாள், மாவுதிடல் மலையடி நாச்சியார், கள்ளிக்காடு துர்க்கை அம்பாள், பட்டயக்கார அம்பாள், கண்ணகிபுரம் பத்திரகாளி அம்பாள், பிட்டிவயல் நாச்சிமார், இத்தியடி நாச்சிமார் (நாகபூசணி அம்பாள்) என்பனவே ஏனைய பத்து சக்தி பீடங்களுமாம்.





இவற்றுள்ளே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே சிறக்கப்பெற்று வரலாற்றுச்சிறப்புமிக்கதாய் புங்குடுதீவின் தெற்கு கடற்கரையோரத்தில் ஏறத்தாள ஆயிரம் பரப்பு நிலத்திலே
சித்திரமணி மகுடம் பத்மமலர் வதனமும்
செம்பவள வாய் முறுவலும்
சிந்தூரப் பொட்டழகும் செய்ய விருகாதினில்
திகழும் பொற் கொம்பினழகும்
முத்து மூக்குத்தியும் நெஞ்சிற் பதக்கமும்
முருகுதவழ் மலர் மாலையும்
முத்தாரம் கையினிற் கடகமும் கணையாழி
மொய்த்திட்ட விரலினழகும்
கொத்துமணிமேகலையும் வஞ்சி
நுண்ணிடை – யழகும்
கோகனகப் பாதச் சிலம்பும்
கோடானகோடி யருணோதயப் பிரகாசமும்
கொண்ட நின் காட்சி யடியேன்
எத்தனை விதங்கள்தான் ஒண்ணிருங் காணாது
ஏங்குதே நெஞ்சமம்மா!
எழிலாரும் புங்கைநகர் தென்கரையில்
தங்கி வாழ் இராஜராஜேஸ்வரி அம்மையே!
என்று எல்லோரும் போற்றி வழிபட்டு பேறடையும் வண்ணம் அமைந்திருப்பது கண்ணகை அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.

புங்குடுதீவிலே வாழ்ந்த நிலச்சுவாந்தர்களில் ஒருவராகிய கதிரவேலு ஆறுமுகம் உடையார் என்பார் ஒரு பொழுது ஒரு பேழையினை புங்குடுதீவின் தென்கிழக்கு கடற்கரையிலே கோரியா என்னும் இடத்தில் கண்டெடுத்தார். அப்பேழையினை எடுத்து வந்து தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திலே இருந்த பழமையான பூவரசம் மரத்தின் கீழே வைத்து திறந்து பார்த்தபோது அங்கே ஒளிமயமாகிய ஒரு அம்பாள் சிலை காணப்பட்டது. உடனே ஆறுமுகம் உடையார் ஊர்மக்களின் உதவியோடு அங்கே சிறியதொரு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். கண்ணகி அம்மனை பேழையுடன் வைத்த நானூறு வருடங்கள் பழமையான பூவரசு மரம் தலவிருட்சமாகியது. இச்சம்பவம் நடைபெற்றது 15ம் நூற்றாண்டாயிருத்தல் வேண்டும்
காலத்துக்கு காலம் இவ்வாலயம் புனரமைக்கப்பெற்று வந்து நாளடைவிலே சுண்ணக்கல்லினாலே நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பெற்றது. 1880ம் ஆண்டிலிருந்து நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்த்தொடங்கியது.

1931ம் ஆண்டு கோவில் புனரமைப்புச்செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன்போது கருவறையில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தின் வடக்குப்புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாக சமுத்திரத்தை நோக்கியதாக ஸ்ரீ கண்ணகை அம்பாளும் பிரதிட்டை செய்யப்பட்டனர். இவ்வாண்டு கோயில் திருவிழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
1944 இல் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957இல் ஆலயத்தின் சுண்ணாம்புக் கட்டடம் அனைத்தும் சீமெந்துக் கட்டங்களாக மாற்றம்பெற்றன. இதன்பின் 1964இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957 இல் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுர வேலைகள் மற்றும் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சித்திரத்தேர் வேலைகளும் 1979இல் நிறைவு செய்யப்பட்டதோடு நைமித்திய பூசைகள் சித்திரா பௌர்ணமியை ஆரம்பமாய் கொண்டு 15 நாட்களாக மாற்றப்பட்டது. 1954ம் ஆண்டில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவின் சிறப்புப்பற்றி இன்றும் பேசப்படுகின்றது.

பொன்பெருகு சைவநெறிப்
புண்ணியம்பொலியமறை
பூத்தவாகமங்கள் பொலியப்
புராணவிதிகாசங்கள் தருநீதி நிறை பொலியப்
பொழிந்த திருமுறைகள் பொலிய
அன்புநாண் ஒப்புரவு
கண்ணோட்டம் வாய்மையெனும்
ஐந்துமுயர் சால்பு பொங்கும்
ஆனந்த சமுதாய ஞானவொளி பொலியமெய்
யடியாரும் தமிழும் பொலிய
முன்புதொடுவினை நீக்கி முத்தியுறு பணியாக்கி
முந்துமன் னுயிர்கள் பொலிய
முத்துநவ ரத்தின மிசைத்த மணித் தேரேறி
முதுவீதி வருமன்னையே
இன்பமிகு நின்பாத பங்கயமலர்ந்த சுக
மெங்களுக் கினிதருளுவாய்
எழில்வாரிப் புங்குநகர் வந்த கண்ணகித்தாயே!
இராஜராஜேஸ்வரியே!

Sunday, December 9, 2012

கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?


உதைத்தால் கடவுளும் கூட...
அடி உதவுவது போல, அண்ணன் தம்பி உதவமாட்டார்கள். அடியாத மாடு படியாது. ஆணை அடித்து வளர்க்கணும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இப்படி எத்தனை, எத்தனையோ பழமொழிகள் தமிழில். தமிழனின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் வகையில் இவை அமைந்துள்ளன எனக்கூடக் கூறலாம்.

ஓடப்பராயிருக்கும், ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார், உணரப்பா நீ என்றே கூறிவிட்டார் புரட்சிக் கவிஞர்,.

அடித்துத் திருத்த முடியாது, அன்பால் திருத்தலாம் என்பர் மென்மனம் கொண்டோர். எது எப்படி இருப்பினும் அடித்து வேலை வாங்கினால்தான் சரிப்படும் என்பவர்களைத் திருத்தவே முடியாது. அவர்களின் தத்துவம் சரி என்கிற நினைப்பு கூட வந்துவிடுகிறது நமக்கு,. கடவுள் ஒன்றுக்கு ஏற்பட்ட கதையைக் கேட்கும்போது!

நெல்லை, பாளையங்கோட்டையில் இருக்கும் எத்தனையோ கோயில்களில் ராஜகோபாலன் கோயிலும் ஒன்று. வைணவக் கோயில் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை ஒருபக்கம் ருக்மணி பெண்டாட்டி. மறு பக்கம் சத்யபாமா சகதர்மிணி. இரண்டு பெண்டாட்டிக்கார கடவுள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் குந்திக் கொண்டுள்ளது. இந்த லட்சணத்தில் இது உற்சவராம்-. தெருத் தெருவாக இதைத் துக்கிக் கொண்டு அலைவர் அய்யங்கார்கள்.

இந்தப் பொம்மையின் மூக்கு உடைந்த காயத் தழும்பு காணப்படுகிறது. செய்தவன் சரியாகத்தான் செய்திருப்பான் - சாமிமலையிலோ நாச்சியார் கோயிலிலோதானே கடவுள்களின் உற்பத்தி ஸ்தானம்! அவர்கள் மூக்கும் முழியுமாகத்தான் செய்திருப்பார்கள். பின் எப்படி காயம், தழும்பு-?
ராஜகோபாலன் கோயிலின் அர்ச்சகர் விஷ்ணுப்பிரியன் என்பவருக்கு எல்லாமே பெண் குழந்தைகளாம். புத்தேள் நரகம் போகாமல் தப்பிப்பதற்காக ஆண் குழந்தை வேண்டும். என்று ஆசைப்பட்டானாம். ராஜகோபாலனிடம் வேண்டிக் கொண்டாராம். அந்த முறை பிறந்ததும் பெண்ணாகவே இருந்து விட்டதாம். கையில் இருந்த அர்ச்சனைத் தட்டாலேயே கடவுள் ராஜகோபாலனைக் சாத்து, சாத்து என்று சாற்றி விட்டானாம். ராஜகோபலன் பொம்மையின் மூக்கு உடைபட்டகாயம் தானாம் அது. வேண்டுதல் பலிக்காமல் போனதற்காகக் கடவுளைப் போட்டு அடித்தான் பக்தன் என்றும் அடிவாங்கிய பிறகு, பிறந்த பெண்ணை ஆணாக மாற்றி விட்டது கடவுள் என்றும் புளுகி வைத்துள்ளார்கள்.

அப்ப, அடி உதவுவது போல எதுவும் உதவாது ஆண்டவனிடம் கூட என்பது கதைமூலம் தெரிகிறது. பக்த கோடிகள் இதனைத் திருவிளையாடல் என்கிறார்கள் என்ன பேர் வைத்தாலும், அடிதானே, உதை தானே! இப்படியெல்லாம் எழுதிக் கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?

கல்லினுள் தேரைக்கும் ...

கல்லினுள் தேரைக்கும் படியளக்கிறது பரமசிவம் என்பார்கள் பக்தர்கள். எல்லார்க்கும் படியளக்-கும் பரமன் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வழிபடப்படுவதில்லை அதனால், அந்த நாடுகளில் உள்ள தரித்திர நாராயணர்களைப் பற்றி எழுதப்போவது இல்லை, இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறோமே, இருக்கின்ற 200 நாடுகளைப் பற்றி பரமசிவன் கவலை கொள்ளக் காணோமே என்று யாரும் யோசிப்பதே கிடையாது. புண்ணிய பாரத பூமியைவிட தரித்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ள வளரும் நாடுகள் எனும் பட்டம் தாங்கிய நாடுகளின் மோசமான நிலையை யாராவது சிவனிடம் சொல்லி வைக்கலாமே! இந்தியாவில் 25 விழுக்காடுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்கள் உள்ளனர். 10 விழுக்காட்டுக்குமேல் வேலை கிட்டாதவர்கள் உள்ளனர். இவர்களின் வயிற்றுப் பாடுக்கு ஏதாவது செய்திட வேண்டாமா? இன்னமும் பாராமுகம் ஏன் பரமனுக்கு? தேரையைவிடக்

கேவலமா, அரிதான மானிடப் பிறவிகள்?

இதுகிடக்க, கல்லினுள் தேரைக்கும் படியளந்த கதையைப் பார்ப்போமா? தேரைத்தவளை சைகிலேரனா ஆஸ்கட்டடா எனும் இனவகையைச் சேர்ந்தது. இதன் உடலில் உள்ள செல்களின் ஆற்றல் மய்யமான மைடோக் கான்ட்ரியா பகுதி, தனக்குத் தேவையான சக்தியைத் தானாகவே தயாரித்துக் கொள்ளும் தனித் தன்மை வாய்ந்தது. தாவரங்கள் தங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்வதைப்போல! தாவரங்கள் எதையும் உண்ணாலேயே வளர்கின்றனவே, அதைப்போல! தவளைகள்தூங்கினாலும் இது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றலைத் தவளை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த இனத் தவளைகளுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பான வசதி இது!

தன் உடலுக்குத் தேவையான வெப்பம், தேவைக்கேற்ப வெப்பத்தைக் கூட்டவும் குறைக்கவுமான வசதி போன்றவையும் தேரைக்கு உண்டு.
ஆகவே, தேரை சாப்பிடாமலே வாழக்கூடிய, வளரக்கூடிய, வசதிகள் அதன் உடலில் இயற்கையாகவே உள்ளன. இது தெரியாமல் பக்தர்கள் பரமசிவன், படி, அரிசி, சோறு, குழம்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மாம்பழத்து வண்டு, கல்லினுள் தேரை போன்றே பல இயற்கைச் செயல்களுக்குக் காரணம் இவை எனும் அறிவில்லாத மக்கள் ஆண்டவனைக் காட்டிக் கொண்டிருக்கும் அறியாமையை அறிவியல் தோலுரித்துக் காட்டியுள்ளது.

குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தேரை பற்றிய ஆய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

சானிடரி நாப்கினுக்குப் பதிலாக...

கணவனை உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒரு புராணக்கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்தார் தன் தந்தை என்பதற்காக யாகத் தீயில் விழுந்து செத்த தன்மனைவியின் வெந்த உடலைத் தூக்கிக் கொண்டு சிவன் அலைந்தானாம். அவளின் பெண்குறிப் பகுதி பிய்த்துக் கொண்டு தனியே விழுந்ததாம், அசாமில் காமாக்யா எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலின் தாத்பர்யம் அதுதானாம்.

கோயிலின் வழிபடு கடவுள், வெறும் பெண்குறி மட்டுமே! கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் வகையில் அதன் கீழே ஊற்று நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இதை வணங்கிப் போகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவும் உண்டு. கடந்த ஜுன் மாதம் 25 ஆம்தேதி நடந்தது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கூட்டம். சிவப்புத் துணி, முகம் முழுவதும் சிவப்புக் குங்குமம், ஓடும் நீரெல்லாம் பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தால் சிவப்பாகிப் போன நிலை.

அம்பாளை வாழ்த்திப் போடப்பட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது. என்ன கோஷம் தெரியுமா? பிரிதிபி ரஜஷால ஹோய் என்பதே! பூமித்தாய்க்கு மாதவிடாய் வருகிறது டோய் என்பது அதன் பொருள்.

அது என்ன? மாதத்தில் மூன்று நாள்கள் மகளிர்க்கு குருதிக் கசிவு ஏற்படுவது இயற்கை. மரித்துப் போன கருமுட்டைகள் வெளியேற்றப்படும் இயற்கை வழி. காமாக்யா கடவுளச்சி அல்லவா? மாதம் ஒரு முறை என்பதற்குப் பதில் ஆண்டுக் கொரு முறை குருதி ஓட்டம் நடக்குதாம்! ஆகவே கோயிலின் கதவுகளைச் சாத்திவைத்து யாரும் பார்க்காதவாறு செய்கிறார்கள் மூன்று நாள்களுக்கு!

நான்காம் நாள் கதவைத் திறந்து காட்டுகிறார்கள். எல்லாம் கழுவிச் சுத்தமாக்கப்பட்ட கருவறைக் காட்சியைக் காணப் பக்தர்கள் கூட்டமோ, கூட்டம்! இந்த ஆண்டு 7 லட்சம் பேர்களாம்! அசாமின் கும்பமேளா கும்பலாம்! இப்படிப்பட்ட முதல் காட்சியைக் கண்ட பக்தர்கள் நினைத்ததெல்லாம் நடக்குமாம்.

இதற்கெனவே ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் அகோர் சாமியார்கள், எப்போதும் அம்மணமாகவே திரிந்து கொண்டிருக்கும் நாகா சாமியார்கள், கூட்டம் கூட்டமாகப் பாதையெங்கும் டென்ட் களில் தங்கிக் கொண்டு கூடியிருக்கின்றனர். சுடுகாட்டில் நள்ளிரவில் சக்தி வழிபாடு நடத்தும் சாமியார்களின் கூட்டமும் வந்ததாம். (சக்தி வழிபாடு பற்றிக் தெரிந்து கொள்ள "ஞான சூரியன்" படிக்கவும்)

வந்த பக்தர்களுக்குப் பிரசாதம் என்ன தெரியுமா? ரத்தக் கறைபடிந்த சிவப்புத் துணித் துண்டு நூல்திரி! குருதிப் பெருக்கு ஏற்பட்ட யோனிப் பகுதியில் வைக்கப்பட்டு மூன்று நாள்கள் இருந்த சிவப்புத் துணியின் கிழிக்கப்பட்ட பகுதிகள்! குமட்டிக் கொண்டு வருகிறதா? தெய்வீகப் பிரசாதம். குறைகூறக் கூடாது.

இந்த மதமும், பண்டிகைகளும், சடங்காச்சாரங்களும் அடங்கிய இந்துத்வா தான் இந்தியாவுக்குத் தேவை என்கிறார்கள்! சானிடரி நாப்கின் வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற விளம்பரம் தொலைக் காட்சியில் வந்தால், ஆச்சாரம், ஒழுக்கம் கெட்டுப் போச்சு எனும் மடிசார் மாமிகள் இந்த விழாபற்றி என்ன கூறுவார்கள்?

நிஷ்காம்ய கர்மம்! – வாலி


‘கடவுள் இல்லை;
 கடவுள் இல்லை;
 கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

‘காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

- ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து – தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது – ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

- என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு -

அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

கதைகளில்

காணுகின்ற

சமயத்துக் கேற்றபடி;

சமயத்துக் கேற்றபடி அல்ல!

நன்றி: விகடன்

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி
 கேள்வி கேட்கலானார்.





 “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
 �். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

Thursday, November 15, 2012

48 நாள் ஐய்யப்ப விரதமும் வழிபாடு பலன்களும்!

நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. நாளை அய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க மாலை அணிய உள்ளனர். இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் கேட்டபடி இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை தேடிச்சென்று அருள் பெற்று திரும்பும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.


சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதால் பக்தர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். சபரிமலை அய்யப்பன் பற்றியும், 48 நாள் விரதம் மற்றும் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…..

சபரிமலை யாத்திரை – விரத முறைகள் சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள்.

யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கும் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.

இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத் தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும்.

பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.

1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது சாலச் சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருஉருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

மாலை அணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

4. காலை, மாலை இரு வேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருஉருவ படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதைïட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளை தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடித்து தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது, “சாமி சரணம்” என்ற தொடங்கிய பின் விடைபெறும்போது “சாமி சரணம்” எனச் சொல்ல வேண்டும்.

8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை ”மாளிகைபுறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளைக் “கொச்சி” என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

11. மாலை அணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களுக்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.

12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு “கன்னி பூஜை” நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் “கன்னி ஐயப்பன்” என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை “பழமக்காரர்கள்” என்றும் அழைக்கப்படுவார்கள்.

15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்து விட்டு “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட தகதியிலிருந்து ஐயப்பன் சன்னதிதானம் செல்லும் வரை அவர்களால் இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் கூறிக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப் பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்போது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.

நீண்ட  வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் கூறுவதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருஉருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி????

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார்
என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.


இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவனயாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

(இந்த வருடம் 13.11.2012 முதல் 18.11.2012 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (18.11.2012) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள்.

அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

Sunday, November 11, 2012

வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்றும் தீபாவளி திருநாள்!

இந்துக்களின் பண்டிகைத் திருநாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரன் எனும் அரக்கன் உயிர்களுக்கு கேடு விளைவித்ததால் அவனை அழித்து உயிர்களை துன்பத்திலிருந்து மீள அருள் செய்தார்.


தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில், மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் எமக்கு எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்றே அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

புராணங்கள் கூறுவதும் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் படியும் பார்த்தால் கொடுமையான அரக்கன் ஒருவனால் அல்லல் உற்றவர்களுக்கு கிருஷ்ண பகவான் திருவருளால் விடுதலை கிடைத்த மாபெரும் தினம் இத்தீபாவளித்திருநாள். அரக்கன் அழிந்தான். கொடுமை இருள் அறியாமை மறைந்தது. ஒளியாமை பிறந்தது. ஆம் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மானிட வாழ்வில் அரக்க குணத்தை விட்டொழித்து நற்குணங்களை தம்மனதில் நிலை நிறுத்தி அறிவு பரப்பிட குறைவில்லாது நிறைவுடன் வாழத்தொடங்கினர். இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து சிறப்புடன் வாழ அறிவுக் கண்களை திறந்து ஒளி பெறச்செய்தனர். இப்படி அன்று இந்நாளில் கொண்டாடியதை இன்றும் அது வழமையாய் தீபாவளிப் பண்டிகை அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதி அன்று கொண்டாப்படுகிறது.

நரக சதுர்த்தசி அன்று நரகாசுரன் அழிந்ததால் மக்கள் துன்ப இருள் நிங்கியது என ஒளி தீபம் ஏற்றி இல்லங்கள் எங்கும் ஒளி ஏற்றினர். வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். அக அழுக்கு, புற அழுக்கு எல்லாம் போக்கி எண்ணெய் தேய்த்து, அதிகாலையில் நீராடி புத்தாடை அணிவர். பின் கவலை மறந்து ஆடிப்பாடி உறவினர்கள் அனைவருடனும் திண்பண்டங்கள், பழங்கள், என விருந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். துன்பம் போக்கிய அந்த கிருஷ்ணபகவானை வாழ்த்தி துதி செய்து மகாலஷ்மியை நிணைந்து அழகுகோலம் இட்டு, வீட்டை அழகு படுத்தி விளக்கேற்றி லஷ்மி பூஜை செய்து வழிபாடாற்றினர். "தம ஸோ மா ஜ் யோதிர் கமய" அதாவது இருளில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல் என்ற வேண்டுதல் உணர்வோடு விளக்கேற்றுவது; கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி பூமாலைகள் தொங்க விட்டு வீட்டை நேர்த்தியாக அழகுபடுத்துவது. இப்படி நமது காலாச்சாரத்தை வளர்த்து இறை உணர்வினை ஊட்டி
ஒற்றுமை மேலோங்கிடச் செய்தனர்.

நமது புராணங்களில் இத் தீபாவளித் திருநாளுக்கு பலவிதமான கதைகள் கூறப்படுகிறது. விஸ்ணு புராணமும் ஸ்ரீமத்பாகவதமும் ஒரேமாதிரியாக குறிப்பிட்டுச் சொல்கின்றன. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது "ப்ருகு" முனிவரின் மகளாகிய ஸ்ரீலட்சுமி பதினான்கு இரத்தினங்களில் ஒன்றாக கொண்டாள். அவள் வடிவம் 'தூயஸ்படிகமணி' போன்ற பேரெழில் கொண்டு கையில் தாமரை மலருடனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருந்தபடி ஆழ்கடலில் இருந்து வெளிப்பட்டாள். அவளை அபிஷேகித்து ஆராதித்து தேவர்களனைவரும் மகாவிஸ்னுவுக்கு அர்ப்பணித்தனர். அவரும் அவளுக்கு தனது இதயத்தில் இடமளித்து மார்பில் அமர்த்திக் கொண்டார்.

செளகந்தர்ய புராணத்தில் கூறப்பட்ட விதம் வேறு. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து பெறப்பட்ட  இரத்தினங்களும் இதர பொருட்களும் சரிவர பிரிக்கப் படாததால் அசுரர்கள் அரசன் 'பலிக்கு' மனக்குறை. அதனால் இரத்தினங்களில் மகாலட்சுமியை அங்கிருந்து அபகரித்து ஒரு இருட்சிறையில் அடைத்து வைத்து விட்டான். அதோடு மட்டுமல்லாது தேவர்களை துன்புறுத்தியும் வந்தான். தேவர்கள் சிவன், பிரம்மா இருவரிடமும் சென்று இதற்கு என்னவழி எனக்கேட்க அவர்கள் விஷ்ணுவிடம் முறையிடுமாறு கூறியதைக் கேட்டு, விஷ்ணுவிடம் குறை களைந்து லட்சுமியை மீட்குமாறும் அவளை ஏற்றுக்கொள்ளவும் வேண்டி நின்றனர்.

பலிமன்னன் தான தர்மர்மங்கள் செய்வதோடு மட்டுமல்லாது மிருத்யுஞ்ச வரமும் பெற்றிருந்தான். அதனைக் கருத்தில் கொண்ட  மகாவிஷ்ணு வாமன உருவம் தாங்கிப் (குள்ள உருவம்) பலி மன்னனிடம் சென்றார். அங்கு அவன் பித்ரு பூஜை செய்யும் சமயத்தில் மூன்றடி மண் நிலத்தை தானமாகப் பெற்று அதை தந்திரமாகக் கையாண்டார். ஓரடி பூலோகத்தையும், ஈரடி பதினான்குலோகங்களையும், மூன்றாவது அடி அவன் தலையிலும் கால் வைத்து அவனை அழித்து இலட்சுமியை மீட்டார். பலி மன்னனும் லட்சுமி என்றும் பூமியில் இருக்குமாறு விஷ்ணுவிடம் வேண்டினான். அதற்கு விஷ்ணுவும் முற்றிலும் இங்கு இருந்திட முடியாது என்று கூறிவிட்டு யார் வீட்டில் ஜப்பசி மாதக் கிருஷ்ணபட்சத் திரயோதசி முதல் அமாவாசை வரை தீபங்கள் ஏற்றி அலங்கரித்து லட்சுமி பூஜை நடத்தப்படுகிறதோ அவர் வீட்டில் அந்த வருடம் முழுவதும் ஸ்ரீலட்சுமி வந்து தங்கி வாசம் செய்வாள் என்றார். அதன்படித் தான் தீபாவளியன்று நாம் தீபங்களை ஏற்றி எங்கும் மங்கலம் பொங்க மகிழ்வுடன் காத்தல் கடவுள் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்குகிறோம்.

தீபாவளியின் பொருள் தீபம்+ ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஆகவே தீபாவளித் தினத்தில் நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது ஆகும். இத்தீபத் திருநாளில் வரிசையாக நேர்த்தியாக கோலங்கள் அழகுடன் மாவினால் வரைந்து நிறமூட்டி தீபங்களை ஏற்றி அதன்மேல் அழகு படுத்தி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம். தீபத்திலிருந்து வெளிப்படும் ஒளி இருளைப்போக்குவது போல் எமது உயிரோட்டத்தின் அடையாளமாக விளங்கும் ஒளிர்கின்ற தீபங்களை நாம் துதிப்பது நமது உள்ளொளியைப் பெருக்கி அக இருளைப்போக்க வல்லது என்பது நமது நம்பிக்கை. ஒளிரும் ஜோதி நிரந்தர முன்னேற்றம் தரவல்லது. ஆகவே இன்நாளில் நீராடி திருநீறு பூசி புத்தாடை அணிந்து ஆலயம் சென்று வழிபாடாற்றி பெரியோரை வணங்கி ஆசி பெற்று ஒழுக்க நெறிகளோடு வாழ அறிவுக்கண்களை திறந்து நல்லொளி பரப்பி நன்மைகளை நினைத்து நல்லதை செய்வோம். அன்போடும் பண்போடும் வாழ்வோம். தமிழர் வாழ்வில் இருள்  அகன்று ஒளி வீச தீபாவளியை கொண்டாடுவோம்.