ஆதிகுடி எனும் இத்தலத்தில் மாடு மேய்ப்பாளன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனமாக இருந்தன. ஒரு நாள் அவன் ஓட்டிச் சென்ற கூட்டத்திலிருந்த பசுக்களில் ஒன்று, ஓரிடத்தில் தானாக பால் சொரிந்து கொண்டிருப் பதைக் கண்டான்.
அங்கே ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவன், தன் கையில் இருந்த மண் வெட்டியால் தரையை வெட்டினான். அந்தப் பகுதியிலிருந்து செங்குருதி பீறிட்டது. அதைக் கண்டு திகைத்துப் போனான் அவன். பிறகு சுயநினைவுக்கு வந்து, ஊருக்குள் ஓடி மக்களிடம் தான் கண்ட அதிசயத்தைக் கூறினான்.
மக்கள் அவனை மிகவும் அதிசயமாகப் பார்த்தனர். ஆமாம், ஒரு கால், ஒரு கை ஊனமாகவே அவனைப் பார்த்திருந்த ஊரார் இப்போது அவன் ஊனம் நீங்கி ஓடோடி வந்தால் அது அதிசயம்தானே! பிறகு, சம்பவம் நடந்ததாக அவன் கூறிய இடத்திற்குச் சென்றனர். அவன் கூறிய இடத்தில் தோண்டிப் பார்த்தனர்.
அங்கு அழகிய லிங்கம் ஒன்று தென்பட்டது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து, அப்போதைய சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால் இறைவனுக்கு ‘அங்குரேஸ்வரர்’ என்ற பெயரே வழங்கலாயிற்று.
இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான, நீத்தார் கடன் நிறைவேற்ற உகந்த தலம் இது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இத்தலத்து இறைவனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெறுவதற்கு முன்பே இங்கு வந்தார். சனீஸ்வரர் எம தண்டத்தினால் தாக்கப்பட்டு கால் ஊனமானார். அந்த நிலையிலேயே சனிபகவான் மானுட வடிவில் பல சிவாலயங்களுக்குச் சென்று, வழிபட்டு தீர்த்த நீராடல்களை மேற்கொண்டு புனிதமான ஆதிகுடி தலத்திற்கு வந்தார்.
இங்கு பல காலம் தவமிருந்து வரங்களைப் பெற்றார். இந்த ஆலயத்தில் உள்ள விமல லிங்கத் திருமேனியை சனிபகவான் சூட்சும வடிவில் வழிபட்டு ஊனம் நீங்கப் பெற்றார். இப்போதும் சனிபகவான் அப்படி வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமல லிங்க வழிபாட்டையே சனீஸ்வர வழிபாடாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். செவ்வாய், சனிக்கிழமைகளில் விமல லிங்கத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் எட்டு வகையான மூலிகை காப்பு இட்டு பூஜை செய்து, வெண்கலப் பானையில் பால், பொங்கல் படைத்து, முழு வாழை இலையில் தானம் அளித்து, அந்த வெண்கலப் பானையை தானம் தந்தால் அனைத்துவித நோய்களிலிருந்தும் குணம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இங்குள்ள விமல லிங்கத்திற்கு வெண்ணெய் காப்பும், அதன்மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்கிறார்கள். ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவி, பிரேமாம்பிகை. ஆலய முகப்பைத் தாண்டியதும் பிராகாரமும் நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சந்நதியும் இடதுபுறம் இறைவனின் சந்நதியும் உள்ளன.
இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகனின் திருமேனியும் அருள்பாலிக்க, கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். அன்னை பிரேமாம்பிகை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். கோஷ்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் காட்சியளிக்கிறார்கள். பிராகாரத்தில் தெற்கில் பெரிய வடிவாக விமல லிங்கம் காணப்படுகிறது. ஆலயத்தில நுழைந்தவுடன் முதலில் கண்களைக் கவருவதும் இந்த விமல லிங்கம்தான்.
கிழக்குத் திருச்சுற்றில் மகா கணபதி, சண்முகநாதர்-வள்ளி-தெய்வானை, மகாலட்சுமி, வடக்கில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள். ஆலய தலமரம், வன்னிமரம். இந்த ஆலயத்திற்கு எதிரே மயானம் உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடியான இத்தலம் இரண்டிற்கு எதிரே மட்டும்தான் இப்படி மயானம் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது.
மாடு மேய்ப்பவன் மேல் கருணை கொண்டு அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் சேர்த்து குணமாக்கி அருள்புரிகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி -அன்பில் பேருந்துப் பாதையில் லால்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment