ஒருவர் பணமின்றி, சாப்பாட்டுக்கே திண்டாடுகிறார் என்றால், அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு தான்.
இறைவனால் தரப்பட்ட இந்த தண்டனையை ஏற்று, இந்தப் பிறவியிலாவது மற்றவர்களுக்கு நன்மையைச் செய்தால், அவருக்கு இறைவனின் அருட்கடாட்சம் நிச்சயம் கிடைக்கும். இந்த உண்மையை உணர்த்துவதே அட்சய திரிதியை கொண்டாட்டத்தின் நோக்கம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன், மலை நாடு எனப்பட்ட கேரளம், வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. அவரவர் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களே குடும்பத் தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு அந்தணர் தம்பதியின் தோட்டத்தில் எதுவுமே விளையவில்லை. இதற்கு காரணம், அவர்களது கர்மவினை. அவர்கள் சாப்பாட்டுக்கே திண்டாடினர்.
இருந்தாலும், அந்த ஏழைத் தம்பதியர் ஆச்சார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தனர். அந்தணர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கப் போவார்; எல்லாரும் அநேகமாக பிச்சை போடுவர். ஆனாலும், சில நாட்கள் முன்வினை பாவம் விரட்டும். அன்று எல்லாருமே கையை விரித்து விடுவர். இவரும், இவரது மனைவியும், பட்டினி கிடப்பர்.
இந்த வீட்டுக்கு, ஒருநாள் பிச்சை கேட்டுச் சென்றார் ஆதிசங்கரர். இவர், காலடி என்ற ஊரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இறையருளால் துறவறம் ஏற்றவர். வாசலில் நின்று ‘அம்மா, பிச்சையிடுங்கள்…’ என்று கேட்டார். அப்போது, அந்தணர் வீட்டில் இல்லை. அந்த அம்மையார் வெளியே எட்டிப் பார்த்தார்.
பால பருவத்தில் தேஜசான முகத்துடன் நின்ற துறவியைப் பார்த்ததுமே, ஏதாவது கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. முதல்நாள் ஏகாதசி என்பதால், வீட்டில் விரதம். துவாதசியன்று அந்தணருக்குக் கொடுப்பதற்காக, அவர் என்றோ வாங்கி வந்த, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தாள்.
எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், எது நம்மிடம் இருக்கிறதோ அதை கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதுதான் நிஜமான தர்மம். அந்த தர்மத்தை, அந்தப் பெண் அனுஷ்டித்தாள். நெகிழ்ந்து போனார் சங்கரர் .
‘அம்மா… மகாலட்சுமி! இவர்களைப் போன்று, இருப்பதைக் கொடுக்கும் மனமுள்ளவர்களிடம் அல்லவா நீ இருக்க வேண்டும்! இந்த வீட்டுக்குள் நீ வர மறுப்பது ஏன்?’ என்றார். அப்போது அசரீரி ஒலித்தது.
‘அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கின்றனர். இன்னும் பாக்கி யிருக்கிறது. அது, முடியட்டும், பார்க்கலாம்…’ என்றது.
உடனே சங்கரர், ‘அம்மா… இரக்கமுள்ளவள் நீ. இன்று இப்படிப்பட்ட நல்ல மனதுக்கு சொந்தக்காரர்களான இவர்கள், முற்பிறவியில் என்ன செய்திருந்தால் தான் என்ன… நீ நினைத்தால் அதைக் களைய முடியாதா?’ என்று பாடினார். கனகதாரா ஸ்தவம் எனப்படும் இந்த ஸ்லோகங்களின் முடிவில், லட்சுமியே இரக்கப்பட்டு, அந்தக் குடிசை வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாக விழச் செய்தாள். அந்த ஏழைகள் தங்கள் வறுமை நீங்கி, பிறருக்கும் வாரிக் கொடுத்தனர். நாம், என்ன பாவத்தை அனுபவித்தாலும் சரி… பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால், நம் கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லமாக இருக்கும்.
***
அட்சய திருதியை அன்று செய்யும் தானத்தின் பலன்கள்…
* நலிந்தவர்களுக்கு உதவி செய்தால், மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.
* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர், மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி வளம் கிடைக்கும்.
* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
* தயிர்சாதம் தானம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும்.
* புண்ணிய நதிகளில் நீராடி, இறைவனை தொழ, வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.
No comments:
Post a Comment